சாத்தூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
By DIN | Published On : 04th March 2019 07:29 AM | Last Updated : 04th March 2019 07:29 AM | அ+அ அ- |

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர் பிரதான சாலையில் பள்ளிகள், கோயில்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், வங்கிகள் உள்ளன. ஆனால் இச்சாலையில் ஏற்கெனவே ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. இதனால் அனைத்துப் பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதில் பேருந்து நிலையம் முன்பும், முக்குராந்தல் பகுதியிலும் தான், எப்போதும் அதிகளவில் நெரிசலுடன் உள்ளது.
சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்ளதால் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் கூட்டம் காணப்படும். ஆனால் மற்ற நாள்களிலும், குறிப்பாக பள்ளி நேரத்தில் காலையிலும், மாலையிலும் நெரிசல் மிகுந்து காணப்படும்.
பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து போலீஸார், புறக்காவல் நிலைய போலீஸார் இருந்தும் இந்த நெரிசலை சரிசெய்வதில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பிரதான சாலையில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட அவசர உதவி வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து போலீஸாருக்கென ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கபட்டுள்ளது. சாத்தூர் பிரதான சாலை, மதுரை பேருந்து நிறுத்தம், முக்குராந்தல் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் இங்கிருந்து போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த இயலும். இருந்த போதிலும் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை போலீஸார் கண்டு கொள்வதில்லை.
எனவே சாத்தூர் பேருந்து நிலையம் முன்பும், முக்குராந்தல் பகுதியிலும் அதிகளவில் போக்குவரத்து போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசலை முழுமையாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.