சிறுபான்மையினர் பாதுகாப்பு பொதுக்கூட்டம்
By DIN | Published On : 04th March 2019 07:30 AM | Last Updated : 04th March 2019 07:30 AM | அ+அ அ- |

இந்திய சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொதுக் கூட்டம் சிவகாசியில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அதன் சிவகாசி நிர்வாகி இக்பால் தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசியது: கடந்த மக்களவைத் தேர்தலின் போது, கொடுத்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்ற வில்லை. வெளிநாடுகளில் உள்ள கருப்புபணத்தை மீட்பேன், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பினை உருவாக்குவேன் என்று கூறினார். ஆனால், இதில் ஒன்றைக் கூட அவர் நிறைவேற்ற வில்லை. சிறு, குறுந்தொழில்கள் அழிந்துவிட்டன. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே அவர் ஆதரவு தருகிறார். மதச்சார்பற்ற கொள்கை என்பது கேள்விக் குறியாகிவிட்டது.
மோடியின் செயல்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆதரவளித்து வருகிறார். மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என மோடி கனவு காண்கிறார். அவரது கனவு பகல் கனவாகிவிடும். நாட்டில் சிறுபான்மையினர் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே வரும் தேர்தலில் மோடியை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே மக்கள் செய்ய வேண்டிய வேலையாகும் என்றார்.
இதில் மாநில இளைஞர் அணித் தலைவர் அசன்மௌலானா, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சிபிசந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.