சுடச்சுட

  

  அருப்புக்கோட்டை அருகே வீட்டுக்குள் புகுந்து 35 பவுன் நகைகள், ரூ.30,000 கொள்ளை: முகமூடிக் கொள்ளையர்கள் கைவரிசை

  By DIN  |   Published on : 16th March 2019 07:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வியாழக்கிழமை இரவு வீட்டினுள் புகுந்த முகமூடிக் கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி, 35 பவுன் நகைகள் மற்றும் ரூ.30,000 பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
  அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியை அடுத்துள்ள வேலாயுதபுரத்தில் மதுரை-தூத்துக்குடி  நான்குவழிச் சாலை அருகில் உள்ள வீட்டில் பத்மாவதி(65) என்பவர் வசித்து வருகிறார். இவருடன், அவரது மருமகள் சுபாசினி(31) மற்றும் சுபாசினியின்2 குழந்தைகள், சுபாசினியின் தாயார் கண்ணகி(56) ஆகியோரும் வசித்து வருகின்றனர். பத்மாவதியின் மகனும், சுபாசினியின் கணவருமான அழகுராஜா(35) சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். 
  இந்நிலையில் வியாழக்கிழமை இரவு பத்மாவதியின் வீட்டின் கதவை மர்ம நபர்கள் சிலர் தட்டியுள்ளனர். 
  அப்போது, கண்ணகி கதவைத் திறந்தார். உடனடியாக உள்ளே புகுந்த முகமூடி அணிந்த 2 பேர் கத்தி மற்றும் உடைந்த மதுபாட்டிலைக் காட்டி, நகை, பணத்தைக் கேட்டு மிரட்டினர். இதனால் அச்சமடைந்த அவர்கள், தாங்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவிலிருந்த நகைகள் உள்பட 35 பவுன் நகைகள், ரொக்கப் பணம் ரூ.30,000 ஆகியவற்றைக் கொள்ளையர்களிடம் கொடுத்தனர். 
  அவற்றைப் பறித்துக் கொண்டு உடனடியாக, வெளியே வந்த கொள்ளையர்கள் வீட்டு வளாகத்திலிருந்த சிசிடிவி கேமராக்களையும் சேதப்படுத்தி விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. 
  இது குறித்து பத்மாவதி கொடுத்த புகாரின் பேரில், பந்தல்குடி போலீஸார் வழக்குப் பதிந்து முகமூடி கொள்ளையர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai