சுடச்சுட

  

  சாத்தூர் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படுமா?

  By DIN  |   Published on : 16th March 2019 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைப் பிரிவு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  சாத்தூர், ஏழாயிரம்பண்ணை, மேட்டமலை, சல்வார்பட்டி, ஒத்தையால், மேட்டுபட்டி உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் 300-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளும் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இவற்றில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதில் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. மேலும் தீக்காயத்தாலும் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். 
  இவ்வாறு விபத்தில் தீக்காயமடைந்தவர்களை சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தால், உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். சிவகாசி அரசு மருத்துவமனையில் தான் தீக்காய சிகிச்சை பிரிவு உள்ளதாகவும், இங்கு அதற்கான வசதிகள் இல்லை என்றும் ஊழியர்கள் தரப்பில் தெரிவிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சாத்தூரிலிருந்து சிவகாசி கொண்டு செல்வதற்குள் பலர் உயிரிழக்கும் நிலை உள்ளது.
  சாத்தூரில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய அரசு மருத்துவமனை கட்டப்பட்டும் தீக்காய சிகிச்சை பிரிவு இல்லாமல் இயங்கி வருகிறது. சிவகாசிக்கு அடுத்தபடியாக சாத்தூர் பகுதியில் தான் அதிகளவில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை விபத்துகள் நடைபெறுகின்றன. 
  எனவே, சாத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர தீக்காய சிகிச்சை பிரிவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai