சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தல்: சிவகாசியில் கட்சிக் கொடிகள், சின்னங்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

  By DIN  |   Published on : 16th March 2019 07:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, சிவகாசியில்  கட்சிக் கொடிகள், சின்னங்கள் மற்றும் தொப்பிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
   விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி பகுதி பட்டாசு தொழிலுக்கு மட்டுமின்றி, அச்சக தொழிலுக்கும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். திரைப்பட சுவரொட்டிகள், நாள்குறிப்புகள் (டைரி), தீப்பெட்டி, அட்டையிலான விசிறிகள் மற்றும் துணிகளாலான கட்சிக் கொடிகள் தயாரிப்பதற்காக ஆயிரக்கணக்கில் அச்சகங்கள் இங்கு செயல்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள், நாள்குறிப்புக்கள் (டைரி), தீப்பெட்டிகள் நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் காரணமாக சிவகாசியில் நாளொன்றுக்கு கோடிக் கணக்கில் வர்த்தகம் நடைபெறும். 
  இந்நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 18 இல் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப் பேரவைகளுக்கான இடைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
  இதைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களின் பொது கூட்டங்கள் மற்றும் பிரசார இடங்களில் கட்சிக் கொடிகள், சின்னங்கள் தோரணமாக தொங்க விடப்பட்டிருக்கும். இவை அனைத்தும் சிவகாசியில் தான் அச்சிடப்படுகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளான அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தங்களது கட்சிகளுக்குத் தேவையான கொடிகள், சின்னங்கள், தொப்பிகள் வாங்குவதற்கு சிவகாசியில் ஆர்டர் கொடுத்து வருகின்றனர். 
  இந்நிலையில் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை போல், தேர்தல் களத்திலும் தங்கள் கொடியை, சின்னத்தை வித்தியாசமான முறையில் வாக்காளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக பல வடிவங்களில் கட்சிக் கொடிகள், சின்னங்களை அச்சடிக்க அனைத்து கட்சியினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் சில அரசியல் கட்சி நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதன் பேரில், பிரசாரத்தின் போது தொண்டர்களுக்கு பயன்படும் வகையில்,  விதவிதமான வடிவங்களில் விசிறி, தொப்பி, நெற்றியில் மாட்டி கொள்ளும் கவசம் மற்றும் தலைவர்கள் உருவம் பொறித்த "பேட்ஜ்', வேட்டி, சேலை, துண்டு முதலானவற்றில் கட்சியின் வண்ணக் கரைகள், சின்னங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன.  மேலும், கட்சி தலைவர்களின் முகமூடிகளும் தயாரிக்க ப்படுகின்றன. 
  இதன் காரணமாக சிவகாசியில் உள்ள அச்சகங்களில் இரவு, பகலாக இவற்றைத் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
  இது குறித்து சிவகாசி அச்சக உரிமையாளர் காசிராஜன் கூறியது: கடந்த மக்களவைத் தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது. 
  அதனால், தேசியக் கட்சிகள் மட்டுமல்லாது, மாநில கட்சிகளும் ஆர்டர்கள் கொடுத்தன. இந்நிலையில், கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து வெள்ளிகிழமைதான் திமுக அறிவித்துள்ளது. கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து இன்னும் அதிமுக அறிவிக்கவில்லை. மேலும்,  அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் போட்டியிட உள்ளன. இருந்த போதிலும், தற்போது வரை அரசியல் கட்சிகளிடம் இருந்து ஆர்டர்கள் வரவில்லை. 
  இருப்பினும் கடைசி நேரத்தில் கிடைக்கும் ஆர்டர்களுக்கு கட்சிக் கொடிகள், சின்னங்கள் வழங்குவதற்காக தற்போது தயாரிப்புப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நிகழாண்டு புது வரவாக கட்சித் தலைவர்கள் வரும் போது வரவேற்கும் விதமாக "வெல்கம் போர்டு'ம், "நெக் போர்டு'ம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai