சுடச்சுட

  

  விருதுநகர் ரயில்வே மேம்பாலத்தில் திறப்பு விழாவுக்கு முன்பே போக்குவரத்து தொடக்கம்

  By DIN  |   Published on : 16th March 2019 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் ராமமூர்த்தி சாலை ரயில்வே மேம்பாலத்தில் திறப்பு விழாவுக்கு முன்பே கார், ஆட்டோ, இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்தை தொடங்கி விட்டன. 
  விருதுநகர், ராமமூர்த்தி சாலையில் நகரின் இரு பகுதியை பிரிக்கும் வகையில் ரயில்வே கடவுப்பாதை இருந்து வந்தது. நகரின் மேற்குப் பகுதியில் மார்க்கெட், பேருந்து நிலையம், ரயில் நிலையம், கோயில்கள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளன. 
  இதனால் கிழக்குப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் தினந்தோறும் ரயில்வே கடவுப் பாதையை கடந்து செல்ல வேண்டியிருந்தது. மேலும், மேற்குப் பகுதியில் அரசு மருத்துவமனை, கல்லூரி மற்றும் பாலிடெக்னிக், நகராட்சி பூங்கா, தலைமை தபால் நிலையம், இ.எஸ்.ஐ மருத்துவமனை, கூட்டுறவு பால்பண்ணை ஆகியவை அமைத்துள்ளன. இதனால் பலர், மேற்குப் பகுதியிலிருந்து கிழக்குப் பகுதிக்கு அடிக்கடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. 
  ஆனால், விருதுநகர் வழியாக தினந்தோறும் 60 க்கும் மேற்பட்ட ரயில்கள்  வந்து செல்கின்றன. இதனால், ராமமூர்த்தி சாலையில் ரயில்வே கடவுப்பாதை அடிக்கடி மூடப்பட்டது. இதனால், ரயில்வே கடவுப்பாதையின் இரு புறத்திலும் ஏராளமான வாகனங்கள் நிற்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. 
  எனவே இப்பகுதியில், ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டுமென பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
   இதையடுத்து 2008 ஆம் ஆண்டில் மேம்பாலம் அமைக்க ரூ.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பாலம் கட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அங்கு தரைப்பாலம் தான் அமைக்க வேண்டும் என சென்னை  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர். இதனைத்தொடர்ந்து ரூ. 21 கோடியில் 8.5 மீ அகலத்தில் மேம்பாலம் கட்ட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 
  அதன்பேரில் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 4 இல் மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டன.  அதில், ரயில்வே தண்டவாளப் பகுதி மற்றும் இருபுறமும் மேம்பாலப் பணிகள் நிறைவடைந்து விட்டன. 
  ஆனால், அரசு மருத்துவமனை அருகே தார்ச்சாலை அமைக்கும் பணி தற்போது வரை நடைபெற்று வருகிறது. மேலும், மேம்பாலத்தின் முன் பகுதியில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், மேம்பாலப் பகுதிகளில் மின் விளக்குகள், கீழ்ப் பகுதியில் மழை நீர் சேகரிப்பு, பாதசாரிகள் ராமமூர்த்தி சாலையை கடக்க படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. 
  இந்நிலையில், திறப்பு விழாவுக்கு முன்பே மேம்பாலம் வழியாக ஆட்டோ, கார், இரு சக்கர வாகனங்கள் வெள்ளிக்கிழமை முதல் செல்லத் தொடங்கின. 
  இதனால், எஞ்சிய பணிகள் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
  மேலும் மேம்பாலத்தின் இரு புறங்களிலும் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமரா பொருத்த போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai