சுடச்சுட

  

  விருதுநகர் தொகுதியில் வெற்றியை தீர்மானிக்கும் புதிய வாக்காளர்கள்

  By DIN  |   Published on : 17th March 2019 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  விருதுநகர் மக்களவைத் தொகுதியில் 1,13,078 புதிய வாக்காளர்களின் வாக்குகள் யாருக்கு கிடைக்கிறதோ அவர்களே வெற்றி பெறும் நிலை உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 
  விருதுநகர் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிகவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் இத்தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். 
  இதன் காரணமாக விருதுநகர் மக்களவை தொகுதியில் மும்முனைப் போட்டி என்பது உறுதியாகிவிட்டது. ஏற்கெனவே, தேர்தல் அறிவிப்பதற்கு முன்னரே திமுகவினர் தென் மண்டல மாநாடு மற்றும் வாக்கு சாவடி நிர்வாகிகள் தேர்வு என தேர்தல் பணியை தொடங்கி விட்டனர். ஆனால், அதிமுக சார்பில் இதுவரை எந்த வித தேர்தல் பணிகளும் தொடங்காத நிலை உள்ளது. 
  அமமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கட்சிக் கொடியேற்றம், கட்சி நிர்வாகிகள் இல்ல விழாக்களில் பங்கேற்று தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். 
  விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் முதலான ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்குகின்றன. 
  இதில், ஆண் வாக்காளர்கள் 7,14,606 பேர், பெண் வாக்காளர்கள் 7,44,588 பேர், திருநங்கைகள் 122 பேர் என மொத்தம் 14,59,316 வாக்காளர்கள் உள்ளனர். 
  தொகுதி சீரமைப்புக்குப் பிறகு கடந்த 2009 இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். அதேபோல், கடந்த 2014 இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட டி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். 
  இந்நிலையில், விருதுநகர் மக்களவை தேர்தலில் உள்ள 14,59,316 வாக்காளர்களில் தற்போது 18 வயது பூர்த்தியடைந்த 19,955 பேர் என மொத்தம் 1,13,078 புதிய வாக்காளர்கள் உள்ளனர். இந்த மக்களவை தேர்தலில் ஜாதி, மதம் மற்றும் கட்சி அடிப்படையில் வாக்குகள் பிரியும் நிலையுள்ளது. ஏற்கெனவே ஒவ்வொரு கட்சிக்கும் குறிப்பிட்ட சதவீத வாக்குகள் உள்ள நிலையில், வேட்பாளரின் வெற்றியை தீர்மானிக்கும் வாக்காளர்களாக புதிய வாக்களர்கள் உள்ளனர். 
  இவர்களது ஓட்டுகள் ஏதாவது ஒரு அணியில் அதிகளவு பதிவானால் அவர்களே விருதுநகர் மக்களவைத் தொகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக வர வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 
  இதன் காரணமாக தொகுதி உடன்பாடிற்குப் பின் கட்சி நிர்வாகிகள், புதிய வாக்காளர்களைக் கவரும் வகையில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாகவும், மேலும், தகவல் தொழில் நுட்ப பிரிவு மூலமும் புதிய வாக்காளர்களைக் கவர திட்டமிட்டுள்ளதாகவும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் தெரிவித்தனர். 
  இதன் காரணமாக தற்போது நடைபெற உள்ள விருதுநகர் மக்களவைத் தேர்தலில் புதிய வாக்காளர்களுக்கு வரவேற்பு அதிகம் இருக்கும் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை என்பது கள ஆய்வின் மூலம் தெரிகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai