சிரமமின்றி வாக்களிக்க மாற்றுத்திறனாளிகள்அடையாள அட்டை நகல் வழங்க வேண்டும்: மாவட்ட தேர்தல் அலுவலர்
By DIN | Published On : 22nd March 2019 07:08 AM | Last Updated : 22nd March 2019 07:08 AM | அ+அ அ- |

வாக்குச்சாவடி மையங்களில் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், வாக்காளர் அடையாள அட்டை நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாளஅட்டை நகலை வழங்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான அ.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவர் மேலும் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்ட மக்களவை தேர்தலை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள், வாக்குச்சாவடிகளுக்கு எளிதில் சென்று வாக்களிக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் வாக்களிப்பது குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
இதன் காரணமாக, 18 வயதுக்கும் மேற்பட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை நகல் மற்றும் மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை நகலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
இதை வழங்க இயலாத மாற்றுத்திறனாளிகள் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் நகலை வழங்கலாம்.
ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசி வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்களது செல்லிடப்பேசியில் "பிடபுள்யுடி ஆப்' பயன்படுத்தி தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவேற்றம் செய்யலாம்.
மேலும் "ஓட்டர்ஸ் ஹெல்ப் லைன் ஆப்' மூலம் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாடியை தெரிந்து கொள்ளலாம். இது தவிர தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள இலவச அழைப்பு எண் 1950-எண்ணிற்கு தொடர்பு கொண்டு, தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை எண்ணை தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...