Enable Javscript for better performance
விருதுநகரில் மழைநீர் குழாய்களில் கழிவுநீர் செல்வதைத் தடுக்கக் கோரிக்கை: குல்லூர் சந்தை அணை பாதிக்கப்- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகரில் மழைநீர் குழாய்களில் கழிவுநீர் செல்வதைத் தடுக்கக் கோரிக்கை: குல்லூர் சந்தை அணை பாதிக்கப்படுவதாக புகார்

    By DIN  |   Published on : 28th March 2019 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் பகுதிகளில்  கவுசிகா ஆறு வழியாகச் செல்லும் மழை நீர் குழாய்களில் கழிவுநீர் செல்வதால் குல்லூர்சந்தை அணையில் உள்ள தண்ணீர் துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்துள்ளது.
    விருதுநகர் கவுசிகா ஆற்றுப் படுகையை ஒட்டிய பகுதியில் அய்யனார் நகர், பர்மா காலனி, அகமது நகர், பாத்திமா நகர் முதலான இப்பகுதிகளில் பெய்யும்  மழைநீர் கவுசிகா ஆற்றுக்குள் செல்லும் வகையில் பெரிய குழாய் அமைக்கப்பட்டது.  இதன் மூலம், மழைக் காலங்களில் வடமலை குறிச்சியில் பெய்யும் மழைநீர் கவுசிகா ஆறு வழியாக குல்லூர் சந்தை அணைக்குச் செல்லும். 
    இதற்கிடையில், விருதுநகரில் கடந்த 2007இல் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் இதுவரை நிறைவு பெற வில்லை. இதன் காரணமாக, பெரும்பாலான குடியிருப்புகளில் பாதாள சாக்கடை தொட்டி இணைப்பு வழங்கப்பட வில்லை. அதனால், வாருகால் வழியாகச் செல்லும் கழிவுநீர், அடைப்பு காரணமாக வெளியேற வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. 
    இதனால், வேறு வழியின்றி மழைநீர் செல்வதற்காக கட்டப்பட்ட இக் குழாய் வழியாக கழிவுநீரை குடியிருப்புவாசிகள் திறந்து விடுகின்றனர். இது குறித்து நகராட்சி நிர்வாகமும் எந்த நடவடிக் கையும் எடுக்க வில்லை. 
    இதன் காரணமாக விருதுநகர் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் கவுசிகா ஆறு வழியாக குல்லூர் சந்தை அணைக்குச் செல்கிறது. இதனால், அணையில் உள்ள தண்ணீர் நிறம் மாறி காணப்படுவதுடன், துர்நாற்றம் வீசுகிறது. மேலும், இந்த அணையிலிருந்து பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மீன்களை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர். 
    எனவே பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடித்து, கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல  வேண்டும்,  குல்லூர்சந்தை அணையில் தூய்மையான தண்ணீரை தேக்க வேண்டும், கவுசிகா ஆற்றில் கழிவுநீர் புகாமல் தடுக்க  பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai