விருதுநகர் மக்களவைத் தொகுதி 36 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு: சுயேச்சைகள் 12 பேரின் மனுக்கள் நிராகரிப்பு
By DIN | Published On : 28th March 2019 08:11 AM | Last Updated : 28th March 2019 08:11 AM | அ+அ அ- |

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட தேமுதிக, காங்கிரஸ், அமமுக, மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 48 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதில், 12 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 36 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் அ. சிவஞானம் தெரிவித்தார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட மார்ச் 19 முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதை தொடர்ந்து, மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்), அழகர்சாமி (தேமுதிக) பரமசிவ ஐயப்பன் (அமமுக), முனியசாமி(மக்கள் நீதிமய்யம்), அருள்மொழிதேவன் (நாம் தமிழர் கட்சி) ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மேலும், இவர்களுடன் சேர்ந்து சுயேச்சைகள் உள்பட மொத்தம் 48 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதில், பிரதான கட்சி வேட்பாளர்கள் சிலர் ஒரே பெயரில் மூன்று வேட்பு மனுக்கள் வரை தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை புதன்கிழமை நடைபெற்றது.
அதில், காங்கிரஸ், தேமுதிக, மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதில், சுயேச்சையாக மனுக்கள் தாக்கல் செய்திருந்த 12 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதன் மூலம் 36 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் வாபஸ் பெற மார்ச் 29 ஆம் தேதி கடைசி நாள் என்பதால், அன்றைய தினம், ஒரே வேட்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தால், அவை வாபஸ் பெறப்படும் என கூறப்படுகிறது.
அதன் பின்னர் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் முழுமையாக வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாத்தூர் இடைத்தேர்தல் 31 பேரின் மனுக்கள் ஏற்பு
சாத்தூர்: சாத்தூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக, திமுக, அமமுக, நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 46 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இவற்றின் மீதான பரிசீலனை சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மொத்தம் 46 பேர் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்களில் 31 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளபட்டதாகவும், இதில், பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 15 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன எனவும் தேர்தல் நடத்தும் அலுவலர் காளிமுத்து தெரிவித்தார்.