தொழிலாளர்கள் பற்றாக்குறை எதிரொலி பட்டாசு உற்பத்தி பாதிப்பு; விலை உயரும்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில், பட்டாசு தயாரிப்பு உள்ளிட்ட இதர பணிகள் செய்ய

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில், பட்டாசு தயாரிப்பு உள்ளிட்ட இதர பணிகள் செய்ய தொழிலாளர்கள் தட்டுப்பாட்டால், பட்டாசு உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, விலையும் உயர வாய்ப்பு உள்ளது என பட்டாசு தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
 நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தீபாவளி பண்டிகைக்கு இரண்டு மணி நேரமே பட்டாசு வெடிக்க வேண்டும். பேரியம் நைட்ரேட் என்ற வேதிப் பொருளைக் கொண்டு பட்டாசு தயாரிக்கக் கூடாது. பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 2018 அக்டோபரில் உத்தரவிட்டது. 
பேரியம் நைட்ரேட் இல்லாமல் பட்டாசு தயாரிக்க இயலாது, பசுமைப் பட்டாசு என்றால் என்னவென்று தெரியாத நிலையில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து, ஆலைகளை மூடி போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் 2018 நவம்பர், டிசம்பர் மற்றும் 2019 ஜனவரி மாதம் வரை சுமார் 90 நாள்களுக்கு மேல் நடைபெற்றதால், பட்டாசுத் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வந்தனர். 
அப்போது பல ஆயிரக்கணக்கான பட்டாசுத் தொழிலாளர்கள், கட்டட வேலை, நூற்பு ஆலை வேலை, வர்ணம் பூசும் வேலை, சுமை தூக்கும் வேலை உள்ளிட்ட வேலைகளுக்குச் சென்று விட்டனர். மூன்று மாத கால போராட்டத்திற்குப்பின்னர் பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டபோது, சுமார் 50 சதம் தொழிலாளர்களே வேலைக்கு வந்தனர். போகப்போக தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்கு வந்து விடுவார்கள் என ஆலை உரிமையாளர்கள் நினைத்திருந்தனர். ஆனால் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் மீண்டும் பட்டாசு ஆலைகளுக்கு வேலைக்கு வரவில்லை என தெரியவந்தது. 
இதனால் பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, பட்டாசு விலை உயரும் நிலை உருவாகி உள்ளது. 
 இது குறித்து பட்டாசு தயாரிப்பாளர்களில் ஒருவரான ரமேஷ் கூறியதாவது: 
பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதும், சுமார் ஒரு மாத காலத்திற்கு பின்னர் ஆலை திறக்கப்பட்டு விடும். வேலைக்கு சென்று விடலாம் என தொழிலாளர்கள் நினைத்து கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்தனர். 
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில், ஆலை திறப்பது தள்ளிக்கொண்டே சென்றதால், பல ஆயிரகணக்கான தொழிலாளர்கள், திருப்பூர், கோயம்புத்தூர், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நூற்பு ஆலை உள்ளிட்டவற்றுக்கு வேலைக்கு சென்று விட்டனர். 
நூற்பு ஆலை நிர்வாகிகள், நிரந்தரமாக வேலைபார்ப்பதாக எழுதிக்கொடுக்க வேண்டும். பட்டாசு ஆலை திறக்கப்பட்டாலும் தொடந்து நூற்ப்பு ஆலையில் வேலை செய்வோம் என உறுதி அளித்தால்தான் வேலை கொடுக்க முடியும் என கூறியதைடுத்து  தொழிலாளர்கள் கையெழுத்திட்டு கொடுத்து விட்டு வேலைக்கு சேர்ந்தனர். 
இதையடுத்து, பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்ட பின்னர், அவர்கள் நூற்பு ஆலையை விட்டு வெளியே வர இயலவில்லை. இதனால் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் போதிய தொழிலாளர்கள் இல்லாததால் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜய்கரிசல்குளம் உள்ளிட்ட ஊர்களில், சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு, ஊதியம் அதிகமாக கிடைப்பதால், பலர் அங்கு வேலைக்குச் சென்று விட்டனர். 
இதனால் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தில் சுமார் 1000 பேர் வேலை பார்த்து வந்த நிலையில், தற்போது சுமார் 700 பேர் தான் வேலை செய்து வருகிறார்கள். வரும் தீபாவளி பண்டிகைக்குப் பின்னர் இந்த நிலை மாறும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com