சிவகாசி, அருப்புக்கோட்டையில் கோடை மழை
By DIN | Published On : 06th May 2019 12:59 AM | Last Updated : 06th May 2019 12:59 AM | அ+அ அ- |

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை கோடை மழை பெய்தது.
சிவகாசி பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் வரவே அச்சப்பட்டனர். சனிக்கிழமை முதல் கத்திரி வெயில் ஆரம்பித்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 4.45 முதல் 5.15 மணி வரை சிவகாசி பகுதியில் மிதமான மழை பெய்ததால், வெப்பம் தணிந்தது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல், அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுப் பகுதிகளில் இடி, மின்னலுடன் சுமார் 45 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது. இம்மழையால், நகர் சாலைகளில் தண்ணீர் ஓடியது. மேலும், நகரின் பள்ளமான பகுதிகளான புளியம்பட்டி காந்தி திடல், ஸ்ரீஅமுதலிங்கேஸ்பரர் கோயில், நான்குமுனை சாலை சந்திப்பு, புதிய பேருந்து நிலையம், பெரிய பள்ளிவாசல், புதுக்கடை பஜார், வாழவந்தம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இருப்பினும், இந்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதாலும், நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதாலும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.