அருப்புக்கோட்டையில் வேகத்தடைகளில் வெண்பட்டைகோடுகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி
By DIN | Published On : 07th May 2019 07:20 AM | Last Updated : 07th May 2019 07:20 AM | அ+அ அ- |

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைல் நகர்ப் பகுதிகளில் வேகத்தடைகளில் அடையாளத்திற்கான வெண்பட்டைக்கோடுகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே அனைத்து வேகத்தடைகளிலும் வெண்பட்டைக்கோடுகள் அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை நகரில் புளியம்பட்டி, விருதுநகர் சாலை, அகம்படியர் மகால் பேருந்து நிறுத்தத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் சாலை, பெரிய பள்ளிவாசல் சாலை, காந்தி நகர் மேம்பாலத்தின் குறுக்கே செல்லும் சாலை என பல்வேறு இடங்களிலும் சுமார் 20-க்கு மேற்பட்ட வேகத்தடைகள் உள்ளன.
குறைந்த தூர இடைவெளியில் அதிக எண்ணிக்கையிலான வேகத்தடைகள் உள்ளதால் அவற்றை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் முதுகுவலி உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் இந்த வேகத்தடைகளில் அடையாளத்திற்கான வெண்பட்டைக் கோடுகளும் அமைக்கப்படாததால் வேகத்தடை இருப்பது தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.
எனவே தேவையான இடங்களில் மட்டும் வேகத்தடை அமைத்தும், அதன் மீது அடையாளத்திற்கான வெண்பட்டைக்கோடுகள் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.