சிவகாசி அருகே சாலையில் தீப்பற்றி எரிந்த கார் ஓட்டுநர் தப்பினார்
By DIN | Published On : 15th May 2019 06:58 AM | Last Updated : 15th May 2019 06:58 AM | அ+அ அ- |

சிவகாசி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார், செவ்வாய்க்கிழமை திடீரென தீப் பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. ஓட்டுநர் உயிர்தப்பினார்.
சென்னையை சேர்ந்தவர் நீலமலை (56). இவரது மகன் திருமணம் சிவகாசி அருகே உள்ள கெங்காகுளத்தில் வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நீலமலை, தனக்கு சொந்தமான காரை செவ்வாய்க்கிழமை ஓட்டி வந்துள்ளார்.
ஆமத்தூர் பேருந்து நிலையம் அருகே வந்தபோது, காரிலிருந்து கரும்புகை வெளிவந்துள்ளது. இதையடுத்து, நீலமலை காரை விட்டு கீழே இறங்கி விட்டாராம். சிறிது நேரத்தில் கார் தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து ஆமத்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காரில் உள்ள ஏசி இயந்திரத்தில் மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.