மின்சாரம் பாய்ந்து 2 கூலி தொழிலாளிகள் பலி
By DIN | Published On : 16th May 2019 07:01 AM | Last Updated : 16th May 2019 07:01 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூரில் தோட்ட வேலைக்குச் சென்றிருந்த கூலி தொழிலாளி அங்கு மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள லட்சுமியாபுரத்தைச் சேர்ந்தவர் பெ.மாசாணன் (57). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் அருகேயுள்ள முருகன் என்பவர் தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வேலைக்கு சென்றவர் இரவு நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் மாசாணனின் மனைவி யசோதை அவரை தேடி தோட்டத்துக்குச் சென்றுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது மாசாணன் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து யசோதை வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழககுப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்: விருதுநகர், பாண்டியன் நகர் தங்கமணி காலனியை சேர்ந்தவர் கண்ணன் (37). சமையல் தொழிலாளியான இவருக்கு நவீன்குமார், சந்தோஷ்குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மனைவி முத்துபாண்டியம்மாள் (35) பூக்கட்டும் தொழில் செய்து வருகிறார். கண்ணன் புதன்கிழமை வீட்டில் வேட்டியை தேய்ப்பதற்காக மின்சார இஸ்திரி பெட்டியை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அவரது மனைவி மயங்கிய நிலையில் இருந்த கணவரை மீட்டு விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே கண்ணன் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாண்டியன் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.