வடமலாபுரத்தில் சுகாதார வளாக மின் மோட்டாரை சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 16th May 2019 07:01 AM | Last Updated : 16th May 2019 07:01 AM | அ+அ அ- |

விருதுநகர் அருகே வடமலாபுரத்தில் பெண்கள் சுகாதார வளாகத்தில் உள்ள மின் மோட்டாரை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் அருகே உள்ள வடமலாபுரத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தைச் சேர்ந்த பலர் பட்டாசு ஆலை மற்றும் கூலி தொழில் செய்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இங்கு போதுமான தண்ணீர் வசதி செய்யப்பட்டிருந்ததால் இதனை அப்பகுதி பெண்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இந்த சுகாதார வளாகத்தில் இருந்த மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சுகாதார வளாகத்தில் பயன்படுத்த தண்ணீர் கிடைக்கவில்லை.
இதையடுத்து மின்மோட்டாரை சீரமைக்கக் கோரி அப்பகுதியினர் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் அப்பகுதி பெண்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக சுகாதாரக் கேடு மற்றும் தொற்றுநோய் பரவும் நிலை உள்ளது.
எனவே மின் மோட்டாரை சீரமைக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.