விழுப்பனூரில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விழுப்பனூரில் பண்டைய தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணப்படுவதால்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விழுப்பனூரில் பண்டைய தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணப்படுவதால் அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலர் அர்ச்சுணன், தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள மனு: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, விழுப்பனூரில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் ஆய்வு செய்ததில், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அங்கு குடியிருப்புகள் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.
மேலும் அங்கு பல இடங்களில் முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்டு, அவற்றின் மீது கற்பாறைகள் அடுக்கப்பட்டுள்ளன. மூன்று விதமான ஓடுகளும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. முதுமக்கள் தாழிகளின் ஓடுகள் சுமார் 2 அங்குலம் கணத்தில் செம்மண் மற்றும் கரிசல் மண் கலந்து, இரண்டு அடுக்குகளைக் கொண்டுள்ளன. 
மேலும் அதில் ஒன்று முதல் இரண்டு அங்குலத்திற்கு வண்ணம் தீட்டப்பட்டு உள்ளது. அப்பகுதியில் பூ வேலைப்பாடுகளுடன் கூடிய மெருகேற்றப்பட்ட ஓடுகளும் சிதறிக் கிடக்கின்றன. அதேபோல் சில வகையான, அதிக எடை கொண்ட கற்கள் காணப்படுகின்றன. அவை இரும்புத்தாது கலந்து சுட்ட மண்ணால் செய்யப்பட்டவை போல் உள்ளது. முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்ட இடத்தின் வடபுறம் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சிற்றோடை செல்கிறது. அச்சிற்றோடையின் வடகரை சுவரில், படிமம் போன்ற தோற்றம் உள்ளது. எனவே இது முந்தைய காலத்தில் அப்பகுதியில் கட்டுமானம் இருந்ததை உறுதிப்படுத்துகிறது. அதேபோல் வடக்கு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் கீழ்புறத்திலும் முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்டுள்ளன. எனவே, அப்பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்தால், பல நூற்றாண்டு காலத்திற்கு முன்பு இப்பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் பண்பாட்டையும், நாகரிகத்தையும் அறிய முடியும். மேலும் இப்பகுதியை ஆய்வு செய்த பல்வேறு கல்லூரி வரலாற்றுப் பேராசிரியர்கள் இப்பகுதியில் கண்டிப்பாக அகழ்வாராய்ச்சி செய்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 
எனவே மத்திய, மாநில அரசுகள் தொல்லியியல் துறைகள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் அங்கு கட்டப்பட உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவகத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com