சிவகாசி புறநகர் பகுதிகளில் அடிக்கடி மின்தடை: பொதுமக்கள் பாதிப்பு

சிவகாசி புறநகர் பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

சிவகாசி புறநகர் பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
சிவகாசிப் பகுதியில் ஆனையூர் ஊராட்சி, சித்துராஜபுரம் ஊராட்சி, விஸ்வநத்தம் ஊராட்சி, நாரணாபுரம் ஊராட்சி, விளாம்பட்டி ஊராட்சி உள்ளிட்ட பல ஊராட்சிகள் உள்ளன. 
இதில் ஒவ்வொரு ஊராட்சியிலும் பல கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளுக்கு சிவகாசி சாட்சியாபுரம் மற்றும் இ.எஸ்.ஐ. துணை மின்நிலையங்களிலிருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் தினசரி இரவு நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் குழந்தைகள், உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியவர்கள்  உள்ளிட்டோர் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து மின்வாரிய ஊழியர் ஒருவர் கூறியதாவது: 
மாலை 6 மணிக்குமேல் வீடுகளில், மின் விளக்குகள் பயன்படுத்துவதால் பகல் நேரத்தை விட இரவில் மின்சாரம் அதிகமாக செலவாகும். எனவே மாலை மற்றும் இரவு நேரங்களில் மின்தடை ஏற்படும் போது, மின்வாரியத்திற்கு மின்சாரம் மிச்சமாகிறது. மேலும் சிவகாசிக்கு கயத்தாரிலிருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது.
இப்போது கயத்தாரிலிருந்து குறிப்பிட்ட நேரங்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுவதால், சிவகாசிப் பகுதியிலும் மின்சாரம் விநியோகம் நிறுத்திவைக்கப்படும். பொதுவாக கோடை காலங்களில் மின் உற்பத்தி குறைவாகவும், தேவை அதிகமாகவும் இருக்கும்.
 எனவே தற்போது மின்விநியோகத்தை நிறுத்தி வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com