முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
மகளிர் சுகாதார வளாகத்தை திறக்கக் கோரிக்கை
By DIN | Published On : 18th May 2019 07:52 AM | Last Updated : 18th May 2019 07:52 AM | அ+அ அ- |

சாத்தூர் அருகே துலுக்கன்குறிச்சியில் உள்ள மகளிர் சுகாதார வளாகத்தை திறக்க, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட துலுக்கன்குறிச்சி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இப்பகுதியில் பிரதான சாலையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் 5 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர்க்கான சுகாதார வளாகம் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதை, அப்பகுதியினர் பயன்படுத்தி வந்தனர்.
பின்னர், ஊராட்சி நிர்வாகம் சரியான முறையில் பராமரிக்காததால், பயனற்ற நிலைக்கு தள்ளப்பட்டது. அதையடுத்து, பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, மகளிர் சுகாதார வளாகத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.
ஆனால், இதைச் சுற்றிலும் கருவேல மரங்கள் அதிகளவில் முளைத்துள்ளதால், சமூக விரோதச் செயல்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், பெண்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியவில்லை. மேலும், சுகாதார வளாகத்தில் முறையான தண்ணீர் வசதியும் இல்லை.
எனவே, ஊராட்சி நிர்வாகம் சார்பில் மகளிர் சுகாதார வளாகத்தை சுற்றியுள்ள கருவேல மரங்களை அகற்றி, தண்ணீர் வசதியை மேம்படுத்தி, சரியான பாதை அமைத்து திறக்க வேண்டும் என, கிராமத்தினர் வலியுறுத்துகின்றனர்.