மனிதக் கழிவுகளை வாருகாலில் திறந்து விடுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை: நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
By DIN | Published On : 18th May 2019 07:52 AM | Last Updated : 18th May 2019 07:52 AM | அ+அ அ- |

விருதுநகர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள வாருகாலில் மனிதக் கழிவுகளை திறந்து விடுவோருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என, பொதுமக்களுக்கு நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த எச்சரிக்கை நோட்டீஸில் கூறியிருப்பதாவது: குடியிருப்பு பகுதியிலிருந்து மலம் கலந்த கழிவுகளை வாருகாலில் திறந்து விடுவதால் தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது. மனிதக் கழிவுகளை கையால் அள்ளக் கூடாது என மத்திய-மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.
எனவே, இத்தவறை முதல் முறையாக செய்ய தூண்டுவோருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ. 2 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். அதனால், 10 நாள்களுக்குள் வாருகாலில் மனிதக் கழிவுகளை விடுவதை நிறுத்தி, சுகாதாரத்தை மேம்பட செய்யவேண்டும் என, அதில் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், விருதுநகர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள உள் தெரு, வைத்தியன் பொன்னப்பன் தெரு, கிருஷ்ணமாச்சாரி சாலை, சுப்பையா பிள்ளை தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதாளச் சாக்கடைக்கான குழாய் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால், இப்பகுதியில் மனிதக் கழிவுகள் அனைத்தும் வாருகால் வழியாகவே விடப்படுகின்றன.
மேலும், பல இடங்களில் பாதாளச் சாக்கடை குழாய் பதிக்கப்பட்டும், வீடுகளுக்கானை இணைப்பு வழங்கப்பட வில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், இப்பகுதியில் குடியிருப்போர் பாதாளச் சாக்கடை இணைப்பு வழங்கக் கோரி நகராட்சியில் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, நகரில் அனைத்து இடங்களிலும் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடித்து, அனைவருக்கும் பாதாளச் சாக்கடை இணைப்பு வழங்கிய பின்னர், இத் திட்டத்தை நிறைவேற்ற நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.