விருதுநகர் அருகே தீக்குளித்த கார் ஓட்டுநர் உயிரிழப்பு
By DIN | Published On : 18th May 2019 07:49 AM | Last Updated : 18th May 2019 07:49 AM | அ+அ அ- |

விருதுநகர் அருகே ஆணைக்குட்டம் பகுதியில் குடும்பப் பிரச்னை காரணமாக, தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற கார் ஓட்டுநர், சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள எஸ். கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் அழகர் (39). கார் ஓட்டுநரான இவர், மனைவி பெருமாளக்காள் மற்றும் குழந்தைகளுடன் ஆணைக்குட்டம் பகுதியில் வசித்து வந்தார்.
மதுப் பழக்கத்துக்கு அடிமையான இவர், கடந்த மே 12 ஆம் தேதி உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் எனக் கூறி மனைவியிடம் ரூ. 200 வாங்கியுள்ளார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால், கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து, பெருமாளக்காள் அருகிலுள்ள தனது தம்பி கண்ணன் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த அழகர், மனைவியை மிரட்டுவதற்காக இரு சக்கர வாகனத்திலிருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார்.
உடனே, அவரை மீட்ட உறவினர்கள், சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அழகர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின்பேரில், ஆமத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.