சாத்தூர் தெப்பக்குளத்தில் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
By DIN | Published On : 23rd May 2019 06:49 AM | Last Updated : 23rd May 2019 06:49 AM | அ+அ அ- |

சாத்தூரில் உள்ள சிவன் கோயில் தெப்பக்குளத்துக்கு வரும் வரத்து கால்வாய்களை தூர்வாரி தெப்பக்குளத்தில் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் பகுதியில் சிவன்கோயில் முன் உள்ள தெப்பக்குளத்திற்கு சாத்தூர் வைப்பாறு மற்றும் பிரதான சாலையில் உள்ள மரிய ஊருணி பகுதியிலிருந்து மழை காலங்களில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரத்து இருந்தது. இதனால் இங்கு கார்த்திகை தீபத்தன்று தீபத்திருவிழா மற்றும் மரணமடைந்தவர்களுக்கு திதி கொடுக்கப்பட்டு வந்தது. மேலும் தெப்பத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து அப்பகுதி மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தி அடைந்து வந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தெப்பக்குளத்திற்கு வைப்பாற்றிலிருந்தும், மரியஊருணியிலிருந்து வரும் நீர்வரத்துப் பாதை, கடைகளின் ஆக்கிரமிப்பு, முறையாக பராமரிக்கப்படாதது போன்ற காரணங்களால் அடைபட்டு தண்ணீர் செல்ல பாதையே இல்லாமல் காணாமல் போய்விட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் கடந்த ஆண்டுகளில் இந்த பகுதியில் நல்ல மழை பெய்தும் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தெப்பக்குளத்தில் தண்ணீர் தேக்க முடியமால் போனது. எனவே நகராட்சி நிர்வாகம் தெப்பக்குளத்துக்கு வரும் வரத்து வாய்க்கால்களை தூர்வாரியும், ஆக்கிரமிப்புகளை அகற்றியும் நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.