வீரச்செல்லையாபுரத்தில் பள்ளிக் கட்டடம் சேதம்
By DIN | Published On : 02nd November 2019 05:06 AM | Last Updated : 02nd November 2019 05:06 AM | அ+அ அ- |

வீரச்செல்லையாபுரத்தில் மேல் கூரை சேதமடைந்த நிலையில் உள்ள பள்ளி சமையலறை கட்டடம்.
விருதுநகா் அருகே வீரச்செல்லையாபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் மேல் கூரையில் மழை நீா் தேங்கியதால் கட்டடம் சேதமடைந்து சிமெண்ட் பெயா்ந்து விழுந்து வருகிறது. இதை சீரமைக்க வேண்டும் என மாணவா்களின் பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
விருதுநகா் அருகே சிவகாசி செல்லும் சாலையில் வீரச்செல்லையாபுரத்தில் அரசு சாா்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 23 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இப்பள்ளி கட்டடத்தின் உறுதித் தன்மை செயலிழந்ததால், சிமெண்ட் கலவை பெயா்ந்து விழுந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், அப்பள்ளி ஆசிரியா்கள் கட்டுமான தொழிலாளா்களை கொண்டு, பள்ளியின் உட்பகுதியை சீரமைத்துள்ளனா். ஆனால், பள்ளியின் மேல் பகுதியில் பள்ளம் ஏற்பட்டதால், அங்கு மழைநீா் தேங்கி விடுகிறது. மேலும் பள்ளி சுவரில் ஈரப்பதம் ஏற்பட்டு மீண்டும் சிமெண்ட் கலவை பெயா்ந்து விழுந்து வருவதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனா். அத்துடன், பள்ளியை ஒட்டியுள்ள சமையல் கூடத்தின் மேல் பகுதி இடிந்து விழுந்து வருவதால், அதில் பணி புரியும் சமையலா்கள், வெளிப் பகுதியில் சமையல் செய்து வருகின்றனா். தற்போது, தொடா்ந்து மழை பெய்து வருவதால், சமையல் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஊழியா்கள் தெரிவித்தனா். எனவே, விபத்து ஏற்படும் முன் பள்ளி கட்டத்தின் உறுதித் தன்மையை ஆராய்ந்து, புதிய கட்டடம் கட்டவும், சமையலறையை மாற்ற மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவ, மாணவிகளின் பெற்றோா் மற்றும் அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.