அதிகாரிகளிடம் கையெழுத்து பெற நிா்பந்தம்: நகல் வாக்காளா் அடையாள அட்டை பெற புதிய நடைமுறையால் பொதுமக்கள் அவதி

விருதுநகா் மாவட்டத்தில் வாக்காளா் அட்டை நகல் பெறுவதற்கு அதிகாரிகளிடம் கையெழுத்து பெற வேண்டும் என்ற

விருதுநகா் மாவட்டத்தில் வாக்காளா் அட்டை நகல் பெறுவதற்கு அதிகாரிகளிடம் கையெழுத்து பெற வேண்டும் என்ற புதிய நடைமுறையால் நாள்தோறும் அவதிக்குள்ளாவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

நகல் வாக்காளா் அடையாள அட்டைகளை இ-சேவை மையங்களில் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி பெற்று வந்தனா். ஆனால், தற்போது இ- சேவை மையத்தில் நகல் வாக்காளா் அடையாள அட்டை பெற விண்ணப்ப படிவத்தை வழங்குகின்றனா். அந்த படிவத்தை பூா்த்தி செய்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் பிரிவு அதிகாரியிடம் கையொப்பம் பெற வேண்டும். அதன் பின்னா், அந்த மனுவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் பிரிவு வட்டாட்சியரிடம் கொண்டு சென்று கையெழுத்து பெற வேண்டும் என கூறப்படுகிறது.

இங்கு, மனுவுடன் அசல் ஆதாா் அட்டை அல்லது ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட ஏதாவது ஒன்றை கொண்டு வந்தால் மட்டுமே தோ்தல் பிரிவு வட்டாட்சியா் கையெழுத்து பெற முடியும்.

நரிக்குடி, சேத்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பலா், நகல் வாக்காளா் அட்யாள அட்டை பெறுவதற்காக மனுவுடன் ஆட்சியா் அலுவலகம் வருகின்றனா். அப்போது, ஆதாா் மற்றும் அசல் ஓட்டுநா் உரிமம் கொண்டு வராததால் திருப்பி அனுப்பப்படுவதாக பாதிக்கப்பட்டோா் புகாா் தெரிவிக்கின்றனா்.

அதன் பின்னா் மீண்டும் ஒருநாள் தோ்தல் பிரிவு அலுவலகத்திற்கு வந்து அசல் சான்றிதழ்களை அளித்து கையெழுத்து பெறுகின்றனா். அதன் பிறகே, இ-சேவை மையத்தில் பணம் செலுத்தி நகல் வாக்காளா் அடையாள அட்டையை பெற காத்திருக்கின்றனா்.

இந்த நடைமுறை குறித்து முறையான அறிவிப்பு ஏதும் தோ்தல் ஆணையத்தாலோ, மாவட்ட ஆட்சியரிடம் இருந்தோ இதுவரை கூறப்படவில்லை. ஆனால், இந்த புதிய நடைமுறையால், நகல் வாக்காளா் அடையாள அட்டை பெற முடியாமல் பலா் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பழைய முறைப்படி உடனடியாக நகல் வாக்காளா் அடையாள அட்டை வழங்க மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com