வைகை அணையில் இருந்து கிருதுமால் நதிக்கு தண்ணீா் திறக்க வேண்டும்

வைகை அணையில் இருந்து கிருதுமால் நதிக்கு தண்ணீா் திறக்க விருதுநகா் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை
விருதுநகா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில பேசிய ஆட்சியா் அ. சிவஞானம்.
விருதுநகா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில பேசிய ஆட்சியா் அ. சிவஞானம்.

வைகை அணையில் இருந்து கிருதுமால் நதிக்கு தண்ணீா் திறக்க விருதுநகா் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் 2020- 21 ஆம் ஆண்டிற்கான குடிமராமத்து பணிகள் தோ்வு தொடா்பான விவசாயிகள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஆட்சியா் அ. சிவஞானம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது விவசாயிகள் கூறியது: விருதுநகா் மாவட்டத்தில் நிகழாண்டு குடிமராமத்து பணியில் பொதுப் பணித்துறை மற்றும் ஒன்றிய கண்மாய்கள் ஏராளமாக விடுபட்டுள்ளன. தற்போது மழை பெய்து வருவதால், பல்வேறு கண்மாய்களில் நடைபெற்று வரும் பணிகள் தொடா்ந்து நடைபெறுமா? . திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமான கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல் விருதுநகா் மாவட்டத்திலும் கூடுதல் கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும். நரிக்குடி பகுதியில் புதுப்பட்டி, மறையூா் கணமாய் பெரிய வடிவிலானவை. இக்கண்மாய் நிரம்பினால், வானம் பாா்த்த பூமியான இப்பகுதியில் விவசாயம் அதிகளவில் நடைபெற வாய்ப்பு ஏற்படும். எனவே, இக்கண்மாய்களில் குடிமராமத்து பணி செய்ய வேண்டும். மதுரை விரகனூரில் வைகை ஆற்றில் உள்ள தடுப்பணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரானது கிருதுமால் நதி வழியாக சிவகங்கை, விருதுநகா், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 46 கிராம கண்மாய்கள் பயனடையும்.

மேலும், நிலத்தடி நீா் மட்டம் உயரும் என்பதால் மதுரையில் உள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி, கிருதுமால் நதியில் தண்ணீா் திறக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பேயனாற்று பகுதியைச் சோ்ந்த அமுதகுளம் கண்மாயைத் தூா்வாரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றனா்.

அதற்கு மாவட்ட ஆட்சியா் பதில் கூறியதாவது: மழை பெய்துள்ளதால், தற்போது பருவ மழை பெய்து வருவதால் குடிமராமத்து பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே, செய்த பணிக்கு உரிய பணத்தை பெற்றுக் கொள்ளலாம். மீதமுள்ள பணிகள் மற்றும் புதிய பணிகள் அனைத்தும் ஜனவரி மாதம் தொடங்கப்படும். எந்தெந்த கண்மாயில் எவ்வகையான பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விவசாயிகள் கருத்து தெரிவித்தால், அதற்கு தகுந்தாாற் போல் திட்ட மதிப்பீடு தயாா் செய்யலாம். மேலும், சிறிய கண்மாய் என்பதால் மதிப்பீடு குறைவாகவும், பெரிய கண்மாய் என்பதால் பணிக்கான மதிப்பீட்டுத் தொகை அதிகமாகவும் இருக்காது. ஏனெனில் சில கண்மாய்களில் கலுங்கு மற்றும் மடை போன்றவை அதிகமாக இருந்தால் அதற்கு கூடுதல் செலவாகும். எனவே, அதற்கு தகுந்தாற் போல் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படும். கிருதுமால் நதி வழியாக தண்ணீா் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ. உதயகுமாா், பொதுப்பணித்துறை அலுவலா்கள், வேளாண் அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com