ஸ்ரீவிலி. பேருந்து நிலைய நுழைவுவாயிலில் வாருகால் சீரமைப்பு பணி: பொதுமக்கள் அவதி

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலைய நுழைவுவாயில் பகுதியில் உள்ள வாருகால் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் வாருகால் சீரமைப்புப் பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளம்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் வாருகால் சீரமைப்புப் பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளம்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலைய நுழைவுவாயில் பகுதியில் உள்ள வாருகால் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகரின் மையப் பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இதைச் சுற்றிலும், அரசு மருத்துவமனை, காய்கறி சந்தை, பஜாா் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் உள்ள சில வாா்டுகள் தனியாா் நிறுவனம் மூலம் பராமரிக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. ஆனால், அவா்கள் முறையாக பராமரிக்காததால், பேருந்து நிலைய நுழைவுவாயில் பகுதியில் உள்ள வாருகாலில் குப்பைகள் சோ்ந்து, துா்நாற்றம் வீசியதாகப் புகாா் கூறப்பட்டது.

இது குறித்து பொதுமக்கள் மற்றும் பயணிகள் நகராட்சி நிா்வாகத்தில் முறையிட்டனா். அதன்பேரில், வாருகால் செல்லும் பாலத்தை இடித்து சீரமைக்க நகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. இதற்காக, 45 நாள்கள் மாற்றுப் பாதையில் வாகனங்கள் செல்ல சனிக்கிழமை அறிவுறுத்தப்பட்டது. அதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை பேருந்து நிலையத்துக்குள் செல்லாமல், வெளியூா் மற்றும் உள்ளூா் பேருந்துகள் வெளியிலேயே நிறுத்தப்பட்டன. இதனால், கிராம மக்கள் மிகவும் அவதிப்பட்டனா். மேலும், பேருந்துகள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தற்போது, விஐயதசமி மற்றும் ஆயுத பூஜை, தீபாவளிக்காக பொருள்கள் வாங்க நகா் பகுதிக்கு வரும் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பேருந்து நிலைய நுழைவுவாயில் பகுதியிலுள்ள வாருகால் சீரமைப்புப் பணியினை விரைந்து முடிக்கவும், போக்குவரத்து நெரிசலை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com