Enable Javscript for better performance
அமெரிக்க படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வரப்பு ஓரங்களில் சூரியகாந்தி, தட்டைப் பயிர் நட வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    அமெரிக்க படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வரப்பு ஓரங்களில் சூரியகாந்தி, தட்டைப் பயிர் நட வேண்டும்

    By DIN  |   Published on : 14th September 2019 05:41 AM  |   அ+அ அ-   |    |  

    விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களில் அமெரிக்க படைப்புழு தாக்குதலை தடுக்க வரப்பு ஓரங்களில் சூரியகாந்தி மற்றும் தட்டைப்பயிர்களை பயிரிட வேண்டும். இந்த பயிர்களிலிருந்து வரும் வாசனை பூச்சிகளை அழித்து விடும் தன்மை கொண்டது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் அமெரிக்கப் படைப் புழுக்களை கட்டுப்படுத்துவதற்கான பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வேளாண் பல்கலை.யின் பயிர் பாதுகாப்பு மைய இயக்குநர் பிரபாகர், பூச்சியியல் துறை பேராசிரியர் சாத்தையா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 
    அப்போது, அவர்கள் கூறியது: இந்தியாவில் பிற மாநிலங்களை விட பயிர்களில் பூச்சிகள் தாக்குதல் என்பது தமிழகத்தில் குறைவாகவே உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மக்காச் சோளப் பயிர்கள் 27ஆயிரத்து 300 ஏக்கரில் பயிரிடப்பட்டன. அதில் 70 சதவீத பயிர்கள் அமெரிக்கப் படைப் புழுக்களின் தாக்குதலால் பாதிக்கப்பட்டன. மக்காச் சோளப் பயிர்களுக்கு எந்தெந்த மருந்துகளை தெளிக்க வேண்டும் என்பது குறித்து உரக்கடைகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதை மட்டுமே விவசாயிகள் வாங்கி பயன்படுத்த வேண்டும். அதேபோல், வேளாண் அலுவலர்கள் அறிவுறுத்தலின் படியே, குறிப்பிட்ட அளவுள்ள மருந்துகளை தெளிக்க வேண்டும். மேலும், விவசாயிகள் மக்காச் சோளம் பயிரிட்ட 20 நாள்களில், வரப்பு ஓரங்களில் எள், தட்டைப் பயிர்  மற்றும் சூரியகாந்தியை விதைக்க வேண்டும். அவை வளர்ந்தவுடன், அதிலிருந்து வரும் வாசனை பூச்சிகளை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. மேலும், இப்பயிர்களில்  உருவாகும் பூச்சிகள், மக்காச் சோளப் பயிர்களை தாக்கும் அமெரிக்கப் படைப்புழுக்கள் மற்றும் அதன் முட்டைகளை தேடிச் சென்று உண்ணும் தன்மையுடையவை. மக்காச்சோளப் பயிர்களுக்கு மருந்து அடிக்கும் போது, வரப்போர பயிர்கள் பாதிக்காதபடி மருந்து தெளிக்க வேண்டும் என்றனர். இந்த கருத்தரங்கில் வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். 
     முன்னதாக மக்காச்சோளப் பயிரில் படைப்புழு மேலாண்மை குறித்த தொழில்நுட்ப கையேட்டினை ஆட்சியர் அ. சிவஞானம் வெளியிட தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக பயிர் பாதுகாப்பு மைய இயக்குநர் பிரபாகர் பெற்றுக் கொண்டார்.       

    kattana sevai