கே.கரிசல்குளம் ஆற்றுப்படுகையில் ஆழ்துளைக்கிணறு அமைக்க எதிர்ப்பு: சமாதானக்கூட்டம் தோல்வி

கே. கரிசல்குளம் ஆற்றுப்படுகையில், காரியாபட்டி பேரூராட்சி பகுதிகளுக்கு புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை நடைபெற்ற சமாதான கூட்டத்திலிருந்து கிராம மக்கள் வெளியேறி


கே. கரிசல்குளம் ஆற்றுப்படுகையில், காரியாபட்டி பேரூராட்சி பகுதிகளுக்கு புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை நடைபெற்ற சமாதான கூட்டத்திலிருந்து கிராம மக்கள் வெளியேறி தர்னாவில் ஈடுபட்டனர். 
 விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னையால் குடிநீர் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. பொது மக்கள் குடிநீர் வழங்கக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 
இந்த நிலையில், குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ரூ.1.18 கோடி மதிப்பில் கே.கரிசல்குளம் ஆற்றுப்படுகையில் 6 ஆழ் துளைக் கிணறுகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு 7 ஆவது, 8 ஆவது வார்டுகளுக்கு உள்பட்ட கே. கரிசல்குளம் பகுதியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். 
 இதையடுத்து, காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில கே. கரிசல்குளம் பகுதி பொதுமக்கள், முன்னாள் வார்டு கவுன்சிலர் செந்தில்வேல் தலைமையில் கலந்து கொண்டனர். 
 இதில், வட்டாட்சியர் ராம் சுந்தர், பேரூராட்சி செயல் அலுவலர் மோகன் கென்னடி, காவல் ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கே. கரிசல்குளம் பொதுமக்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் சுமார் 2,500 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்களுக்கே குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது. எங்களது ஊரின் ஆற்றுப்பகுதியிலிருந்து காரியாபட்டிக்கு ஏற்கெனவே குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. மேலும், ஏற்கெனவே போடப்பட்ட 10-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளில் தற்போது தண்ணீர் இல்லை. அதிகளவு ஆழ்துளைக்கிணறு அமைத்ததால் விவசாய கிணறுகளிலும் தண்ணீர் வற்றிவிட்டது. இந்த நிலையில், மீண்டும் எங்களது குடியிருப்பு பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்க பேரூராட்சி நிர்வாகம் முடிவெடுத்திருப்பதை ஏற்க முடியாது என தெரிவித்தனர்.
  இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர், காரியாபட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்குவது நிர்வாகத்தின் கடமை. எனவே, ஆழ்துளைக்கிணறு அமைக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com