ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சாலையை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சாலையை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடைபெற இருந்த நிலையில், பேச்சுவார்த்தைப் பின்னர் கைவிடப்பட்டது. 
ராஜபாளையம் - சத்திரப்பட்டி சாலையில் உள்ள ரயில்வே கடவுப்பாதையை கடப்பதற்காக மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது.
 இந்நிலையில் ரயில்வே மேம்பாலப் பணிக்காக மலையடிப்பட்டி சாலை மாற்றுப்பாதையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு ஓராண்டாகியும் இதுவரை இந்த மாற்றுப்பாதை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருப்பதுடன் தாமிரவருணி கூட்டுக் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டத்திற்கு ஆங்காங்கே பள்ளம் தோண்டி வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்கக் கோரி ஏற்கெனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் முகத்திரை அணிந்து நடைப்பயணம், மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்திற்கு பின்பும் நடவடிக்கை எடுக்காததால் செவ்வாய்க்கிழமை மலையடிப்பட்டியில் சாலை மறியல், கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.
 அதன்படி மலையடிப்பட்டியில் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  ஈடுபட்டனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட முயன்றனர். 
இதுகுறித்து தகவலறிந்து வந்த ராஜபாளையம் நகராட்சி (பொறுப்பு) ஆணையர் நடராஜன், வடக்கு காவல் நிலைய ஆய்வாளர்  பார்த்திபன், கட்சியின் நகரச் செயலாளர் மாரியப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 இதில் சாலையை ரூ. 6.80 லட்சம் மதிப்பில் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com