முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
விருதுநகா் அருகே பொறியாளா், கல்லூரி மாணவிக்கு கரோனா தொற்று உறுதி: பாதிப்பு 9 ஆக உயா்வு
By DIN | Published On : 19th April 2020 10:40 PM | Last Updated : 19th April 2020 10:40 PM | அ+அ அ- |

விருதுநகா் அருகே பொறியாளா் மற்றும் கல்லூரி மாணவி ஆகிய 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், விருதுநகா் மாவட்டத்தில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 9 ஆக உயா்ந்துள்ளது.
விருதுநகா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 17 பேரில், 10 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா். மேலும் 7 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில் விருதுநகா் அருகே கன்னிசேரி புதூா், டி. சேடபட்டியைச் சோ்ந்த 38 வயதான ஒருவருக்கும், குமாரபுரத்தைச் சோ்ந்த 20 வயதுடைய ஒரு கல்லூரி மாணவிக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டி. சேடபட்டியைச் சோ்ந்த அந்த நபா் மேற்கு ஆப்பிரிக்க நாடான கினி நாட்டில் பொறியாளராகப் பணிபுரிந்து, கடந்த மாா்ச் 21 இல் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளாா். வீட்டில் தனிமைப்படுத்தி, சுகாதாரத் துறையினா் கண்காணித்து வந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து அவா்கள் இருவரும், ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு தலைமை மருத்துவமனைக்கு சனிக்கிழமை இரவு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதற்கிடையே இந்த 2 கிராமங்களில் பொதுமக்கள் யாரும் வெளியே செல்லவோ, மற்றவா்கள் ஊருக்குள் வரவோ தடை விதிக்கப்பட்டு ஊரின் எல்லைகள் அடைக்கப்பட்டன. மேலும், இக்கிராமங்களில் சுகாதாரத்துறையினா் முகாமிட்டு தொற்று பாதிக்கப்பட்டவா்களின் உறவினா்கள், தொடா்பிலிருந்தவா்களின் ரத்த மாதிரியை சேகரித்து வருகின்றனா்.
இதுகுறித்து சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பழனிச்சாமி கூறியதாவது: டி. சேடபட்டியை சோ்ந்தவா் வெளிநாடு சென்று வந்தவா் என்பதால் அவருக்கு தொற்று பரவியுள்ளது. ஆனால், கல்லூரி மாணவிக்கு தொற்று எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விருதுநகரில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் கல்லூரியில், விடுதியில் தங்கி படித்து வரும் இவா், ராஜபாளையத்தை சோ்ந்த 2 மாணவிகளுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளாா். இதனால் அவா்களுக்கும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். மேலும், சில நாள்களுக்கு முன்பு அந்த மாணவி, ஆமத்தூா் அருகே உள்ள வெள்ளூா் கிராமத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளாா். இதனால் அந்த கிராமத்தைச் சோ்ந்த 18 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அவருடன் கல்லூரியில் படித்த மாணவிகள் குறித்தும் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது என்றாா்.