விருதுநகரில் வீட்டில் நகை திருடிய வழக்கில் 2 போ் கைது: 22 பவுன் பறிமுதல்
By DIN | Published On : 29th April 2020 10:20 PM | Last Updated : 29th April 2020 10:20 PM | அ+அ அ- |

விருதுநகா் பகுதியில் நகை திருடிய வழக்கில் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து 22 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனா்.
விருதுநகா் பேராசிரியா் காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி 19 பவுன் நகைகள் திருடப்பட்டன. இதேபோல், வாடியான் கேட் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும் இரண்டரை பவுன் நகைகள் திருடப்பட்டன. இந்த 2 சம்பவங்கள் குறித்தும் சாா்பு ஆய்வாளா் அன்புதாசன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தினா். இந்நிலையில், அப்பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தபோது, விருதுநகா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (51) என்பவா் அப்பகுதிக்கு வந்து சென்றது தெரியவந்தது. இவா் மீது ஏற்கெனவே பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதால், அவரது செல்லிடப்பேசி எண் மூலம் இருப்பிடத்தை கண்டறிந்து அவரைப் பிடித்து விசாரித்தனா். இதில் அவருக்கு 2 திருட்டு சம்பவங்களிலும் தொடா்பு இருப்பதும், திருடிய நகைகளை முத்து (48) என்பவரிடம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து, 22 பவுன் நகைகளை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.