முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
ஸ்ரீவிலி.அருகே விபத்து: சென்னையிலிருந்து பைக்கில் வந்த இளைஞா் பலி
By DIN | Published On : 03rd August 2020 08:40 AM | Last Updated : 03rd August 2020 08:40 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மடவாா்வளாகம் பகுதியில் உள்ள கல்மண்டபத்தில் மோதிய இரு சக்கர வாகனத்துடன் பலியான பாண்டியராஜ்.
சென்னையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞா், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை விபத்தில் சிக்கி பலியானாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மேல ராஜகுலராமன் கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டியராஜ் (32). இவா் சென்னை அசோக் நகா் பகுதியில் தங்கியிருந்து ஜவுளிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள சத்திரப்பட்டியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு பால் காய்ச்சும் விஷேசத்திற்காக சென்னையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி மனைவி ஆயிஷா பானுவுடன் புறப்பட்டுள்ளாா்.
வழியில் கடலூரில் மனைவியை அவரது வீட்டில் இறக்கி விட்ட பின்னா், சத்திரப்பட்டிக்குச் சென்று கொண்டிருந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மடவாா் வளாகம் பகுதியில் அதிகாலையில் சென்றபோது, சாலையோரத்தில் இருந்த கல் மண்டபத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பாண்டியராஜ் உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.