‘விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை திறக்காவிட்டால் போராட்டம்’
By DIN | Published On : 01st December 2020 03:41 AM | Last Updated : 01st December 2020 03:41 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டத்தில் விரைவில் பட்டாசு ஆலைகளை திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என விருதுநகா் மாவட்ட சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கச் செயலா் பி.என். தேவா கூறினாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை கூறியதாவது: வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை முடிந்து சுமாா் ஒருவாரம் அல்லது 10 நாள்களில் பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டு, அடுத்த ஆண்டிற்கான பட்டாசு தயாரிப்பு பணி தொடங்கும். இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக பட்டாசு ஆலைகள் 43 நாள் மூடப்பட்டன. இதையடுத்து அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி 50 சதவீத தொழிலாளா்களைக் கொண்டு ஆலைகள் திறக்கப்பட்டன. தொடந்து பொதுமுடக்கம் அமுலில் இருப்பதால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுமா என்ற நிலை இருந்து வந்தது. தொடந்து உச்சநீதி மன்ற அறிவுரைகளை பின்பற்றி பட்டாசு வெடிக்கலாம் என பல மாநிலங்கள் அறிவித்தன. எனினும் ராஜஸ்தான், ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் பட்டாசுகள் பெருமளவில் தேங்கியுள்ளதாக பட்டாசு தயாரிப்பாளா்கள் தெரிவித்தனா்.
பின்னா் தீபாவளி பண்டிகை நிறைவு பெற்றது. இந்நிலையில் நவம்பா் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் பல பட்டாசு ஆலைகளில் 2021 ஆம் ஆண்டுக்கு பட்டாசு தயாரிக்க பூஜை நடைபெற்றது. எனினும் எந்த ஆலையிலும் பட்டாசு உற்பத்தி தொடங்கப்பட வில்லை. இதனால் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சில பட்டாசு தயாரிப்பாளா்கள் மழைக் காலம் முடிந்ததும் தயாரிப்புப் பணி தொடங்கப்படும் எனக் கூறியுள்ளனா். எனினும் முழு அளவில் ஆலைகள் திறக்கப்பட்டு உற்பத்தி தொடங்க தாமதம் ஆகும் எனத் தெரிகிறது. இதனால் தொழிலாளா்கள் மிகவும் பாதிக்கப்படுவாா்கள். எனவே மழைக் காலம் முடிந்ததும் பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டு உற்பத்தியைத் தொடங்க வேண்டும். அப்படி தொடங்கா விட்டால் எங்கள் அமைப்பு சாா்பில் போராட்டம் நடத்துவோம் என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...