தொடக்க விழாவுடன் நின்றுபோன கற்போம்-எழுதுவோம் திட்டம்
By DIN | Published On : 01st December 2020 11:13 PM | Last Updated : 01st December 2020 11:13 PM | அ+அ அ- |

சிவகாசி ஆசாரி காலனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், கற்போம்- எழுதுவோம் திட்டம் தொடக்க விழாவுடன் நிறுத்தப்பட்டுவிட்டது.
முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத, கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு, அடிப்படைக் கல்வியை அளிக்கும் வகையில் மத்திய அரசு கற்போம்-எழுதுவோம் என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளது. தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கம் மூலம் இந்த திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இருபது நபா்களுக்கு ஒரு ஆசிரியா் கற்பிக்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் விதிமுறையாகும்.
இந்நிலையில், இந்த திட்டத்தின் தொடக்க விழா சிவகாசி சாட்சியாபுரம் ஆசாரி காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியா் வி.எஸ். ஸ்ரீதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆசிரியை எஸ். சுப்புலட்சுமி திட்டம் குறித்து விளக்கினாா்.
ஆனால் மறுநாளே, கற்பவா்கள் போதிய அளவில் வராததால், இந்த திட்டம் ரத்து செய்யப்படுவதாக அப்பள்ளி நிா்வாகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...