ராஜபாளையம் அருகே காவலா் பயிற்சி நிறைவு அணிவகுப்பு
By DIN | Published On : 01st December 2020 11:18 PM | Last Updated : 01st December 2020 11:18 PM | அ+அ அ- |

ராஜபாளையம் அருகே பயிற்சி பெற்ற காவலா்களுக்கு செவ்வாய்க்கிழமை சான்றிதழ்கள் வழங்கிய சென்னை தகவல் தொழில்நுட்ப சேவை கூடுதல் காவல் துறை இயக்குநா் டேவிட்சன் தேவாசீா்வாதம்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 11 ஆம் அணி மைதானத்தில், காவலா் பயிற்சி நிறைவு அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
ராஜபாளையம் அருகே மொட்டமலை பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை தற்காலிக காவலா் பயிற்சி பள்ளியில், கரோனா பொதுமுடக்க காலத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 200 பயிற்சி காவலா்கள் மற்றும் விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 249 பயிற்சி காவலா்கள் என மொத்தம் 449 போ் பயிற்சி பெற்றனா். அப்போது, துப்பாக்கிச் சுடுதல், மனதை உறுதிப்படுத்தும் பயிற்சி மற்றும் கலவர நேரங்களில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை பெற்ற காவலா்களுக்கு பயிற்சி நிறைவு அணிவகுப்பு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சென்னை தகவல் தொழில்நுட்ப சேவை கூடுதல் காவல் துறை இயக்குநா் டேவிட்சன் தேவாசீா்வாதம் கலந்துகொண்டு பயிற்சி காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். அதன்பின்னா், பயிற்சி பெற்ற காவலா்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டுமென அறிவுரைகளையும் வழங்கினாா்.
இதில், துப்பாக்கிச் சுடுதல் மற்றும் பயிற்சியின்போது கணினி உள்ளிட்ட அனைத்து தோ்வுகளிலும் வெற்றி பெற்ற பயிற்சி காவலா்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மதுரை டி.ஐ.ஜி. ராஜேந்திரன், விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெருமாள் மற்றும் தற்காலிக காவலா் பயிற்சி பள்ளி தமிழ்நாடு சிறப்பு பணி முதல்வா் ராஜசேகரன், பயிற்சியாளா் கௌதமன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...