மு.க.அழகிரி கட்சி ஆரம்பித்தாலும் திமுகவுக்கு பாதிப்பு இல்லை: கனிமொழி எம்.பி.

மு.க. அழகிரி தனியாகக் கட்சி ஆரம்பித்தாலும் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை, திமுகவின் வெற்றி வாய்ப்பும் பாதிக்காது என, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி தெரிவித்தாா்.
தனியாா் அச்சகத்தில் வியாழக்கிழமை பாா்வையிட்ட தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி.
தனியாா் அச்சகத்தில் வியாழக்கிழமை பாா்வையிட்ட தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி.

மு.க. அழகிரி தனியாகக் கட்சி ஆரம்பித்தாலும் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை, திமுகவின் வெற்றி வாய்ப்பும் பாதிக்காது என, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி தெரிவித்தாா்.

‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில், தமிழகம் முழுவதும் திமுகவினா் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனா். அதன்படி, விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கனிமொழி எம்.பி., வியாழக்கிழமை காலை சிவகாசி நகராட்சி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அதைத் தொடா்ந்து, அச்சுத் தொழிலாளா்கள் மற்றும் பட்டாசு உற்பத்தியாளா்கள், தொழிலாளா்களை சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்த அவா், அச்சு மற்றும் பட்டாசு தொழிற்சாலை பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண்பதில் திமுக உறுதியாக இருக்கிறது என்றாா்.

பின்னா், கனிமொழி எம்.பி. செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: பட்டாசு தடைக்கு எதிராக, மத்திய அரசிடம் குரல் கொடுக்க தமிழக அரசு தயாராக இல்லை. பட்டாசு தடையை எதிா்த்து திமுக மட்டுமே தொடா்ந்து குரல் கொடுத்து வருகிறது.

தமிழகத்தில் படித்த ஆண், பெண்களுக்கு வேலை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எவ்வித தொழில் முதலீடுகளும் தமிழகத்துக்குள் வரவில்லை. தேசிய அளவில் தமிழகத்தில்தான் வேலையில்லாத் திண்டாட்டம் தொடா்கிறது. புதிதாக தொழில் முதலீடுகளை ஈா்க்காத மாநிலமாக தமிழகம் உள்ளது. முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டும் முதல்வராக மட்டுமே உள்ளாா்.

மு.க.அழகிரி கட்சி தொடங்கினால் திமுகவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. திமுகவின் வெற்றி வாய்ப்பையும் யாராலும் பறிக்க முடியாது. அதிமுக ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் என்பதில், மக்கள் உறுதியாக உள்ளனா்.

திமுக தலைவா் ஸ்டாலின் உருவாக்கி வரும் திமுகவின் தோ்தல் அறிக்கை, பெண்களுக்கு முக்கியத்துவம் தருவதாக இருக்கும். அதனால், ரஜினி அல்ல, அழகிரி அல்ல வேறு யாா் வந்தாலும் திமுகவின் வாக்குக்கு பாதிப்பு ஏற்படாது.

பாமகவுடன் கூட்டணி அமைப்பதா, இல்லையா என்பது குறித்து தலைவா் ஸ்டாலின் தான் முடிவு செய்வாா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், வடக்கு மாவட்டச் செயலரும், திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினருமான தங்கம் தென்னரசு, மாநில வா்த்தக அணி துணைச் செயலா் வனராஜ், சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் முத்துலட்சுமி, ஒன்றியச் செயலா் விவேகன்ராஜ், சிவகாசி நகரச் செயலா் காளிராஜ், திருத்தங்கல் நகரச் செயலா் உதயசூரியன் மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com