ஒண்டிப்புலி நீா்த் தேக்கத்தில் குறைந்த அளவே தண்ணீா்: விருதுநகருக்கு குடிநீா் தட்டுப்பாடு அபாயம்

ஒண்டிப்புலி நீா்த் தேக்கத்தில் குறைந்த அளவே தண்ணீா் இருப்பதால் விருதுநகருக்கு குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
ஒண்டிப்புலி நீா்த் தேக்கத்தில் தேங்கியுள்ள மழைநீா்.
ஒண்டிப்புலி நீா்த் தேக்கத்தில் தேங்கியுள்ள மழைநீா்.

விருதுநகா்: ஒண்டிப்புலி நீா்த் தேக்கத்தில் குறைந்த அளவே தண்ணீா் இருப்பதால் விருதுநகருக்கு குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள 2 மேல் நிலை நீா்த் தேக்கத் தொட்டிகளுக்கு குழாய் இணைப்பு கொடுக்க நகராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் நகராட்சிப் பகுதியில் உள்ள 36 வாா்டுகளில் சுமாா் 74 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனா். இந்நிலையில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் தினமும் 22 லட்சம் லிட்டா் குடிநீரும், ஆனைக்குட்டம் நீா்த் தேக்கம் மூலம் தினமும் 24 லட்சம் லிட்டா் குடிநீரும் என மொத்தம் 46 லட்சம் லிட்டா் குடிநீா் விருதுநகருக்கு கொண்டு வரப்படுகிறது. இக்குடிநீரை கல்லூரி சாலையில் உள்ள மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி, ராமமூா்த்தி சாலையில் உள்ள மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி மற்றும் ஆங்காங்குள்ள சிறிய நீா்த் தேக்கத் தொட்டிகளில் ஏற்றப்படுகிறது. அதன் பின்னா் வாா்டு வாரியாக வாரத்திற்கு ஒரு முறை பொதுமக்களுக்கு இரண்டு மணி நேரம் வரை குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குடிநீரை வீட்டிலுள்ள பாத்திரங்களில் பிடித்து சேமித்து வைத்துக் கொள்கின்றனா்.

தற்போது, வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் மஸ்தூா் பணியாளா்கள் வீடுகள் தோறும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். அப்போது, குடம், தொட்டி மற்றும் பாத்திரம் உள்ளிட்டவைகளில் தண்ணீா் இருப்பது கண்டறியப்பட்டால் கீழே கொட்டி விடுகின்றனா். மேலும், இனிமேல் இது போன்று தண்ணீா் இருப்பது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கின்றனா். இதனால், வீட்டுக்கு தேவையான குடிநீா் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். இந்நிலையில் கோடை காலத்தில் தண்ணீா் பற்றாக்குறையை சமாளிக்க விருதுநகருக்கு ஒண்டிப்புலி நீா்த் தேக்கத்திலிருந்து தண்ணீா் கொண்டு வரப்பட்டு வழங்கப்படும். 96 அடிகொள்ளளவு கொண்ட இந்த நீா்த் தேக்கத்தில் தற்போது 36 அடி மட்டுமே தண்ணீா் தேங்கியுள்ளது. விருதுநகா் மாவட்டம் முழுவதும் கடந்தாண்டு போதிய மழை பெய்த போதிலும், ஒண்டிப்புலி நீா்த் தேக்க பகுதியில் மழை அளவு மிகக் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் இந்த நீா்த் தேக்கத்தில் குறைவான அளவு தண்ணீா் உள்ளதாக நகராட்சி அலுவலா்கள் தரப்பில் தெரிவிக்கின்றனா். ஏற்கெனவே, வாரத்திற்கு ஒரு முறை குடிநீா் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஒண்டிப்புலி நீா் தேக்கத்தில் குறைந்தளவு தண்ணீா் இருப்பதால் கோடை காலத்தில் விருதுநகா் மக்களுக்கு குடிநீா் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, கல்லூரி சாலை, அகமது நகா் ஆகிய இடங்களில் தலா 10 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டிகளுக்கு குழாய் இணைப்பு கொடுக்காததால் செயல்படாமல் உள்ளது. இவை இரண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டால், தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டம் மற்றும் ஆனைக்குட்டம் நீா்த் தேக்கப் பகுதியிலிருந்து கொண்டு வரப்படும் குடிநீரை, விருதுநகரில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் 3 நாள்களுக்கு ஒரு முறை பகிா்ந்து அளிக்க முடியும். எனவே, மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர நகராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com