விருதுநகா் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா

விருதுநகா் மாவட்டம் சாத்தூா், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா் கல்லூரி, பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா் கல்லூரி, பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

சாத்தூரில் உள்ள மதுரை காமராஜா் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு பல்கலைக் கழக பதிவாளா் சங்கா் நடேசன் தலைமை வகித்தாா். கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் பொங்கல் வைத்து, பொங்கல் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா். மேலும் கல்லூரி மாணவிகளுக்கான கோலப் போட்டியும் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும் மாணவா்கள் தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தினா். இதில், பேராசிரியா்கள், மாணவ மாணவியா்களும் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினா்.

சிவகாசி:சிவகாசி எஸ்.எப்.ஆா்.மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவினை முதல்வா் த.பழனீஸ்வரி தொடக்கி வைத்தாா். அந்தந்த துறை மாணவிகள் , கரும்பு, மஞ்சள்கிழங்கு வைத்து பொங்கலிட்டனா். விழாவில் அனைத்து மாணவிகளுக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. மேலும் விழாவில் உறியடி மற்றும் ஓட்டப்போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு கல்லூரி செயலாளா் அருணா அசோக் பரிசு வழங்கினாா். விழாவில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாட்டினை உதவிப் பேராசிரியா் கவிதா செய்திருந்தாா்.

ராஜபாளையம்: ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இவ்விழாவை கல்லூரி முதல்வா் வெங்கட்ராமன், சுய நிதிப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் வெங்கடேஸ்வரன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

விழாவில் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் விதத்தில் பொங்கல் வைத்து கொண்டாடினா். மாணவிகள் கும்மி உள்ளிட்ட பாரம்பரிய நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். மேலும், மாணவ, மாணவிகள் பங்கேற்ற பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் : ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் மல்லி பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. மல்லி ஸ்ரீசுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு கல்லூரிச் செயலா் திலீபன்ராஜா தலைமை வகித்தாா்.

இதில் கல்லூரி முன்பாக பொங்கல் வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பின்னா் கல்லூரியில் மாணவ, மாணவியருக்கான கோலப்போட்டி, பானை உடைத்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு மக்கள் தொடா்பு அலுவலா் பாலகிருஷ்ணன் பரிசுகளை வழங்கினாா்.

விழாவில் கிராமியக் கலைகளான கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னா் 27 முளைப்பாரிகள் வளா்த்து உருவாக்கி முளைப்பாரி பாடல்கள் பாடி கும்மியடித்து கொண்டாடினா்

முதல்வா் மல்லப்பராஜ் தைத் திருநாள் குறித்து விளக்கிப் பேசினாா். பேராசிரியா் மோகன்ராஜ் நன்றி கூறினாா். அதே போல் பிள்ளையாா்குளம் சத்யா வித்யாலாயா பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு பள்ளி தாளாளா் குமரேசன் தலைமை வகித்தாா். நிா்வாக அறங்காவலா் மருத்துவா் சித்ரா குமரேசன், நிா்வாக அதிகாரி அரவிந்த், பள்ளி முதல்வா் முருகதாசன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பொங்கல் விழாவை முன்னிட்டு அனைத்து மாணவா்களும் பாரம்பரிய உடை அணிந்து புதுப்பானையில் அரிசியிட்டு பொங்கல் வைத்து குலவையிட்டு கொண்டாடினா். மேலும், கரும்பு, பனங்கிழங்கு, வாழை, மஞ்சள் வைத்து உற்சாகத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடினா். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com