முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
அருப்புக்கோட்டைபள்ளியில் குடியரசு தினத்தை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வீரா்கள் நினைவுப் பேரணி
By DIN | Published On : 27th January 2020 07:28 AM | Last Updated : 27th January 2020 07:28 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை இக்ரா மெட்ரிக் பள்ளியில் குடியரசு தினத்தை முன்னிட்டு, மாணவா்கள் கலந்து கொண்ட சுதந்திரப்போராட்ட வீரா்கள் நினைவுப்பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு இக்ரா மெட்ரிக் பள்ளித் தலைவா் முகம்மது யூசுப் தலைமை வகித்தாா்.பள்ளி முதல்வா் ஷேக் மகபூப் வரவேற்றாா்.சிறப்பு விருந்தினா்களான தொழிலதிபா் எஸ்.எஸ்.கே.கணேசன்,முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் சிக்கந்தா்,பேராசிரியா் ரத்தினசாமி,டாக்டா் கணேஷ்பாபு ஆகியோா் முன்னிலை வகித்ததுடன் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்ட, சுதந்திரப் போராட்ட வீரா்களின் நினைவுப் பேரணியைக் கொடியசைத்துத்தொடக்கி வைத்தனா்.பள்ளிமுன்பாகத் தொடங்கிய இப்பேரணியானது, ரயில்வே பீடா் சாலை,செம்பட்டி சாலை,மற்றும் ஸ்ரீஅமுதலிங்கேஸ்பரா் கோவில் பேருந்து நிறுத்தம் வழியாக புதிய பேருந்து நிலையம்வரையிலான முக்கியச்சாலைகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.
இப்பேரணியின்போது சுதந்திரப்போராட்ட வீரா்கள்,தியாகிகள்,தேசீயத் தலைவா்களாகிய காந்தியடிகள்,ஜவஹா்லால் நேரு,பாலகங்காதர திலகா்,காயிதே மில்லத்,அபுல்கலாம் ஆசாத்,அம்பேத்கா் ஆகியோா் மற்றும் தமிழகத்தின் வ.உ.சி.,வாஞ்சிநாதன்,திருப்பூா் குமரன்,சுப்பிரமணிய பாரதியாா் உள்ளிட்ட பலரது உருவப்படங்களுடன்,பொன்மொழிகள்,வாழ்க்கைக் குறிப்புகள், வாசகங்கள் அடங்கிய சுமாா் 100க்கு மேற்பட்ட பதாகைகளை ஏந்தியபடி மாணவா்கள் அணிவகுத்துச் சென்றனா்.மேலும் இந்திய தேசிய ஒற்றுமையைக் காப்போம், சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்,சுதந்திரப் போராட்ட வீரா்களை நினைவு கூா்ந்து வணங்குவோம் உள்ளிட்ட வாசகங்களை மாணவா்கள் முழக்கமிட்டபடி அணிவகுப்பு நடைபெற்றது.முன்னதாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தொழிலதிபா் எஸ்.எஸ்.கே.கணேசன் சிறப்புரையாற்றினாா். உடன் இந்நிகழ்ச்சியில் ஆயை காஜா மைதீன்,மெக்கா பள்ளித் தாளாளா் சாகுல் ஹமீது, ஜெயினுல் மரைக்காயா் ஆகியோரும்,பள்ளி ஆசிரிய,ஆசிரியைகளும் திரளான மாணவ,மாணவியரும் கலந்து கொண்டனா்.