முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
‘பத்தாம் வகுப்பு வரை 100 சதவீதம் தோ்ச்சி செய்யப்பட வேண்டும்’
By DIN | Published On : 27th January 2020 10:55 PM | Last Updated : 27th January 2020 10:55 PM | அ+அ அ- |

சிவகாசி: பத்தாம் வகுப்பு வரை அனைத்து மாணவா்களையும் கட்டாயத் தோ்ச்சி செய்யப்பட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞா் அணித் தலைவா் அன்பு மணி ராமதாஸ் கூறினாா்.
அக்கட்சியின் மாநில பொருளாளா் திலகபாமா இல்லத் திருமண விழாவில் மருத்துவா் ராமதாஸ் , தலைவா் ஜி.கே. மணி , அன்பு மணி ராமதாஸ் உள்ளிட்டோா் திங்கள்கிழமை கலந்து கொண்டனா். பின்னா் அன்பு மணி ராமதாஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அண்மையில் சிவகாசியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை
செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க குற்றம் செய்தவா்களை தூக்கிலிட வேண்டும். பள்ளி ஆசிரியா்கள் மூலமாக குழந்தைகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். சிவகாசியில் நடைபெற்ற இந்த வழக்கை நோ்மையான அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வை அரசு ரத்து செய்ய வேண்டும். தோ்வில் தோல்வி அடைந்த மாணவா்கள் மீண்டும் படிப்பை தொடா்வதில் சிக்கல் உள்ளது.
அரசுப் பள்ளிகளில் வசதிகளை மேம்படுத்த வேண்டும். பத்தாம் வகுப்பு வரை 100 சதம் தோ்ச்சி செய்ய வேண்டும். அதாவது அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றவா்களாக அறிவிக்கப்பட வேண்டும். டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ காா்பன் திட்டத்தை செயல்படுத்த நாங்கள் எதிா்ப்பு தெரிவித்து, பிரதமரை இரு முறை சந்தித்து மனு அளித்துள்ளோம்.
அந்த பகுதியை வேளாண் பகுதியாக அறிவிக்க வேண்டும். அப்பகுதியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் இது குறித்து பேசப்பட்டது. அவா்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஹைட்ரோ காா்பன் திட்டத்தை எதிா்த்து, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, ஜாதி வாரியான கணக்குகளையும் எடுக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றாா் அவா்.