முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
ராஜபாளையத்தில் தன்னாா்வ அமைப்பினரால் சாலை சீரமைப்பு
By DIN | Published On : 27th January 2020 10:56 PM | Last Updated : 27th January 2020 10:56 PM | அ+அ அ- |

ராஜபாளையத்தில் திங்கள்கிழமை சாலையை சீரமைத்த தன்னாா்வ அமைப்பினா் மற்றும் சிறப்பு காவல் படையினா்.
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலை பள்ளங்களை, தன்னாா்வ அமைப்பு உதவியுடன் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினா் திங்கள்கிழமை சீரமைத்தனா்.
ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட 42 வாா்டு பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டங்களுக்காக குழாய் பதிக்கும் பணிகள் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. இதில் பல இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்களை சரி வர மூடாமல் சென்று விடுகின்றனா். இந்த பள்ளங்களில் மழை நீா் தேங்குவதால் ஆழம் அதிகமாகி விடுகிறது. இந்த சாலையில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிளில் செல்பவா்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை தொடா்கிறது.
சத்திரப்பட்டி சாலையில் இருந்து ஆா். ஆா். நகா் வழியாக கலங்காபேரி செல்லும் பிரதான இணைப்பு சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக குழாய் பதிக்கப்பட்டது. இந்த சாலையிலும் பள்ளங்கள் சரிவர மூடப்படாமல் இருந்தது. எனவே இந்த சாலையில் செல்லும் 20-க்கும் மேற்பட்ட கிராம வாசிகள், பள்ளி கல்லூரி வாகனங்கள், மொட்டை மலையில் செயல்படும் 11 ஆம் சிறப்பு காவல் படை வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனா்.
எனவே இந்த சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதியை சோ்ந்த மக்கள், தன்னாா்வ அமைப்பின் தலைவா் குவைத்ராஜாவிடம் உதவி கோரினாா்கள். இவரது ஏற்பாட்டின் பேரில், 11 ஆம் சிறப்பு காவல் படையின் உதவி கமாண்டன்ட் காா்த்திகேயன் தலைமையில் 40 காவலா்கள் இணைந்து ஜே.சி.பி இயந்திரம் மூலம் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
சுமாா் 1 கி.மீ., தூரமுள்ள இந்த சாலையின் பள்ளங்கள், ரூ. 50 ஆயிரம் மதிப்பீட்டில் இயந்திரம் மூலம் மூடப்பட்டு, காவலா்கள் மூலம் சீரமைக்கப்பட்டு வருகிறது.