முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
3 முறை கனமழை பெய்தும் கண்மாய்க்கு நீர்வரத்து இல்லை: விவசாயிகள் கவலை
By DIN | Published On : 14th July 2020 09:14 AM | Last Updated : 14th July 2020 09:14 AM | அ+அ அ- |

அருப்புக்கோட்டையில் கடந்த 15 நாள்களுக்குள் 3 முறை கன மழை பெய்தும் பெரிய கண்மாய்க்கு நீர்வரத்து இல்லாததற்கு வரத்துக் கால்வாய்களைத் தூர்வாறாததே காரணம் என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
அருப்புக் கோட்டை பெரிய கண்மாய் நீரை நம்பி வடுகர் கோட்டை, மலையரசன் கோவில் தெற்கு, ராமசாமிபுரம், மற்றும் நகராட்சிக் குடியிருப்பு அருகிலுள்ள சுமார் 100 ஏக்கர் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும் இக்கண்மாய் நீர் தான் நகரின் முக்கிய நிலத்தடி நீராதாரமாகவும் உள்ளது. மழைக்காலங்களில் இக்கண்மாய்க்கு நகரின் பிரதான பகுதிகளிலிருந்து வரத்துக் கால்வாய்கள் மூலம் நீர்வரத்து கிடைத்து வருகிறது.
ஆனால் இவ்வரத்துக் கால்வாயகளில் முளைக்கும் புதர்ச் செடிகள் மழை நீர் வரத்தைப் பெருமளவில் தடுத்து விடுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதில் எஞ்சி வரும் நீரையும் கண்மாயை ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரைகள் உறிஞ்சி விடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனாலேயே நகரில் கடந்த 15 நாட்களில் 3 முறை பெய்த கனமழைக்குப் பின்னரும் அரை அடி உயர நீர் கூட கண்மாயில் சேரவில்லை எனவும் விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
எனவே, பெரிய கண்மாய்க்கான நீர்வரத்துக் கால்வாய்களாகிய பிறமடை ஓடை, அகம்படியர் மகால் பின்புறம் உள்ள ஓடை, பெரியபுளியம்பட்டியிலுள்ள ஓடை என அனைத்தையும் தூர்வாறிப் பராமரிக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.