கரோனாவுக்கு பலியான தலைமைக் காவலா் உருவப் படத்துக்கு டிஐஜி மலரஞ்சலி
By DIN | Published On : 23rd July 2020 08:55 PM | Last Updated : 23rd July 2020 08:55 PM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்த தலைமைக் காவலா் ஜெயப்பிரகாஷின் உருவப்படத்திற்கு, காவல்துறை துணைத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை மலரஞ்சலி செலுத்தினா்.
அருப்புக்கோட்டையில் நெடுஞ்சாலை ரோந்துப்பணியில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்தவா் ஜெயப்பிரகாஷ் (45). கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவா், மருத்துவமனையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து அவரது சடலம், விதிமுறைகளின்படி அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அருப்புக்கோட்டை நகா் காவல் நிலையம் முன்பாக வைக்கப்பட்டிருந்த ஜெயப்பிரகாஷின் உருவப்படத்திற்கு, காவல்துறை துணைத் தலைவா் ராஜேந்திரன், வியாழக்கிழமை மலரஞ்சலி செலுத்தினாா். அப்போது 2 நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், விருதுநகா் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் பெருமாள், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் உமாதேவி (பயிற்சி), வெங்கடேஷ் (அருப்புக்கோட்டை ), நகா் காவல் ஆய்வாளா் பாலமுருகன், ஆவியூா், காரியாபட்டி, மல்லாங்கிணறு, பந்தல்குடி உள்ளிட்ட பகுதிகளின் காவல்நிலைய அதிகாரிகளும், காவலா்களும் கலந்து கொண்டனா்.