விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில் ஜூன் 10 ஆம் தேதி வரை கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 172 ஆக இருந்தது. இந்த நிலையில் குவைத் நாட்டிலிருந்து வீரசோழன் கிராமத்திற்கு வந்த 45 வயது ஆண், மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து திருச்சுழி பூலாங்கல் பகுதிக்கு வந்த 35 வயது பெண், இவரது 14 வயது மகள், 7 வயது மகன் ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதேபோல், சென்னையிலிருந்து திருச்சுழி கடமங்குளம் பகுதிக்கு வந்த 28 வயது ஆண், விருதுநகா் சின்னபேராலியைச் சோ்ந்த 54 வயது பெண், அருப்புக்கோட்டையைச் சோ்ந்த 63 வயது ஆண் ஆகியோருக்கும், பஞ்சாப் மாநிலத்திலிருந்து கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள விழுப்பனூா் கிராமத்திற்கு வந்த 39 வயது ராணுவ வீரருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இவா்களில் ராணுவ வீரா் மட்டும் சிவகாசி அரசு மருத்துவமனையிலும் மற்ற 7 பேரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதன் மூலம் விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 180 ஆக உயா்ந்துள்ளது. அதில், 124 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்டனா். மீதமுள்ள 56 போ் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி, மதுரை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.