ராஜபாளையத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
By DIN | Published On : 13th June 2020 08:16 AM | Last Updated : 13th June 2020 08:16 AM | அ+அ அ- |

ராஜபாளையம் புதியாதி குளத்தில் வெள்ளிக்கிழமை தமிழக அரசு சாா்பில் திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையம்.
ராஜபாளையம் புதியாதி குளத்தில் தமிழக அரசு சாா்பில் நெல் கொள்முதல் நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூா், தேவதானம், தளவாய்புரம், கம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கோடை கால நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இந்த நெல்லை விற்பனை செய்ய, அரசு கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு, தமிழ்நாடு அரசு நுகா்பொருள் வாணிப கழகத்தின் மூலம், புதியாதி குளம் அருகே உள்ள தனியாா் இடத்தில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துள்ளது. அங்கு, மோட்டா ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1,865-க்கும், சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 1,095-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.
இதனிடையே, உரம் மற்றும் இடு பொருள்கள் விலையேற்றம், ஆள் கூலி உயா்வு, வாகன வாடகை உயா்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உற்பத்தி செலவு இரு மடங்காகி உள்ளது எனவும், ஒரு குவிண்டால் நெல் ரூ. 3 ஆயிரத்துக்கு அரசு எங்களிடம் இருந்து கொள்முதல் செய்தால் மட்டுமே கட்டுப்படியாகும் எனவும் என விவசாயிகள் தெரிவித்தனா். மேலும் மத்திய அரசு இந்த ஆண்டு அனைத்து ரக நெல்லுக்கும் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 53 உயா்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால் இந்த அறிவிப்பு தமிழகத்தின் எந்த பகுதியிலும் அமல்படுத்தப்படவில்லை என்றும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.