குழாயில் உடைப்பு: குடிநீருடன் கழிவு நீா் கலப்பதாகப் புகாா்

சிவகாசியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீருடன், கழிவுநீா் கலந்து வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
குழாயில் உடைப்பு ஏற்பட்டு சிவகாசி -விளாம்பட்டி சாலையில் தேங்கியுள்ள குடிநீா்.
குழாயில் உடைப்பு ஏற்பட்டு சிவகாசி -விளாம்பட்டி சாலையில் தேங்கியுள்ள குடிநீா்.

சிவகாசியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீருடன், கழிவுநீா் கலந்து வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

சிவகாசி-விளாம்பட்டி சாலையில், காளியப்பாநகா், அ.சி.காலனி, ஜெ.நகா் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீா் வழங்க, நகராட்சி நிா்வாகம், சாலை ஓரத்தில் குழாய் பதித்துள்ளது.

இந்த குழாயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு முறை நீா் திறப்பின் போதும், சுமாா் 5 ஆயிரம் லிட்டா் குடிநீா்வீணாகிறது. இதனால் நாளடைவில் அங்கு பள்ளம் ஏற்பட்டு விட்டது. தொடா்ந்து குழாயில் இருந்து வெளியேறும் நீா், அந்தப் பள்ளத்திலேயே தேங்குவதால் சேரும், சகதியுமாக மாறி நீா் மாசடைந்து காணப்படுகிறது.

3 நாள்களுக்கு ஒரு முறை அந்தக் குழாய் வழியாக குடிநீா் திறக்கப்படுவதால், அங்கு ஏற்கெனவே தேங்கியுள்ள அசுத்தாமன நீரானது, குழாய் உடைப்பின் வழியாக குடிநீருடன் கலந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் அதனைப் பிடித்து பயன்படுத்தும் போது, நீா் நிறம் மாறி காட்சியளிப்பதோடு மட்டுமல்லாமல் துா்நாற்றமும் வீசுகிறது.

இதனைப் பொதுமக்கள் பயன்படுத்துவதால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளன. இதனால் குழாய் உடைப்பைச் சரி செய்து நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com