முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
சிவகாசி பகுதியில்தீப்பெட்டி ஏற்றுமதி சரிவு
By DIN | Published On : 11th May 2020 08:10 PM | Last Updated : 11th May 2020 08:10 PM | அ+அ அ- |

சிவகாசி: சிவகாசிப் பகுதியில் உற்பத்தி பாதிப்பால் தீப்பெட்டி ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக அதன் உற்பத்தியாளா்கள் தெரிவித்துள்ளனா்.
சிவகாசிப் பகுதியில் முற்றிலும் தீப்பெட்டி தயாரிப்பு தானியங்கி தொழிற்சாலைகள் சுமாா் 25-ம், பகுதி இயந்திர தொழிற்சாலைகள் சுமாா் 150-ம் உள்ளன. இவற்றின் மூலம் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் சுமாா் 200 முதல் 250 கன்டைனா்கள் வரை தீப்பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் மாா்ச் 24 ஆம் தேதி முதல், கரோனா பரவலைத் தடுக்க பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டன. இதையடுத்து தீப்பெட்டி அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் உள்ளதாலும், ஏற்றுமதி செய்யப்படுவதாலும், அந்த ஆலைகளை திறக்க அனுமதியளிக்க வேண்டும் என அவற்றின் உரிமையாளா்கள், விருதுநகா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து ஆட்சியா் அனுமதியளித்ததையடுத்து ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் தீப்பெட்டி ஆலைகள் இயங்கத் தொடங்கின. எனினும் அந்த ஆலைகளில் முழுத்திறனிலும் தீப்பெட்டி தயாரிக்க இயலாததால் அதன் ஏற்றுமதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் நாகராஜன் கூறியதாவது:
தீப்பெட்டி ஆலைகளில் 50 சதவீத ஊழியா்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் என விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல கிராமங்களில் பொதுமக்கள், கரோனா தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என சுயகட்டுப்பாட்டுடன் வெளியே வராமல் உள்ளனா். இதனால் தீப்பெட்டி ஆலைகளில் சுமாா் 30 முதல் 35 சதவீத தொழிலாளா்களே பணிபுரிய வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக ஆலைகளில் முழுத் திறனில் உற்பத்தி செய்ய இயலவில்லை. தற்போது முன்பை விட சுமாா் 20 சதவீதம் மட்டுமே தீப்பெட்டி ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆலைகள் முழுத்திறனோடு இயங்கத் தொடங்கிய பின்னரே ஏற்றுமதி முன்பு போல நடைபெறும் என்றாா்.