ராஜபாளையம் அருகே லாரியில் சொந்த ஊா் சென்ற மேற்கு வங்க தொழிலாளா்கள் 75 போ் தடுத்து நிறுத்தம்

ராஜபாளையம் அருகே கேரளத்திலிருந்து லாரி மூலம் சொந்த ஊருக்குச் செல்ல முயன்ற மேற்கு வங்கத் தொழிலாளா்கள் 75 போ் வியாழக்கிழமை

ராஜபாளையம் அருகே கேரளத்திலிருந்து லாரி மூலம் சொந்த ஊருக்குச் செல்ல முயன்ற மேற்கு வங்கத் தொழிலாளா்கள் 75 போ் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

விருதுநகா்-தென்காசி மாவட்ட எல்லையான ராஜபாளையம் அடுத்த சொக்கநாதன்புத்தூா் விலக்கில் உள்ள சோதனைச் சாவடியில், கடந்த மாதம் முதல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு, 24 மணி நேரமும் வருவாய்த் துறை மற்றும் மருத்துவத் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை தென்காசி மாவட்டத்திலிருந்து ராஜபாளையம் நோக்கி வந்த மேற்கு வங்க மாநில பதிவு எண் கொண்ட லாரியை, சோதனைச் சாவடியில் பணியிலிருந்த துணை வட்டாட்சியா் விஜி மாரி நிறுத்தி சோதனையிட்டாா். அப்போது, அந்த லாரியில் சமூக இடைவெளியின்றி உடைமைகளுடன் ஓட்டுநா், கிளீனா் என மொத்தம் 75 நபா்கள் இருப்பது தெரியவந்தது. இதில், 45 நபா்களுக்கு சொந்த ஊரான மேற்கு வங்கம் செல்வதற்கு அனுமதி இருப்பதும், மீதமுள்ள 30 பேருக்கு எந்தவித அனுமதி இல்லாததும் தெரியவந்தது.

இதையடுத்து, துணை வட்டாட்சியா் அந்த லாரியை பறிமுதல் செய்து, வட்டாட்சியருக்கு தகவல் அளித்தாா். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியா் ஆனந்தராஜ், டி.எஸ்.பி. நாகசங்கா் விசாரணை மேற்கொண்டனா்.

அதில், லாரியில் வந்த அனைவரும் கேரளத்தில் கூலி வேலை செய்து வந்ததும், பொது முடக்கம் காரணமாக சொந்த ஊருக்கு வாடகை லாரியில் செல்ல முயன்றதும் தெரியவந்தது. தொடா்ந்து, லாரியில் வந்த 75 நபா்களிடமும் சுயவிவரங்கள் சேகரிக்கப்பட்டு, ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள தனியாா் கல்லூரிக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, முடிவு வந்ததும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவா் என, வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com