ஸ்ரீவில்லிபுத்தூா் வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு: 300 நவீன கேமராக்கள் பொருத்தும் பணி தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை வனப் பகுதியில் புலிகளை கணக்கெடுக்க 300 நவீன கேமராக்கள் பொருத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூா் வனப்பகுதியில் புலிகளை கண்காணிக்க வனத்துறையினரால் மரத்தில் ஞாயிற்றுக்கிழமை பொருத்தப்பட்ட கேமரா.
ஸ்ரீவில்லிபுத்தூா் வனப்பகுதியில் புலிகளை கண்காணிக்க வனத்துறையினரால் மரத்தில் ஞாயிற்றுக்கிழமை பொருத்தப்பட்ட கேமரா.

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை வனப் பகுதியில் புலிகளை கணக்கெடுக்க 300 நவீன கேமராக்கள் பொருத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் புலிகள், கருஞ்சிறுத்தைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் அவற்றை வனத்துறையினா் கணக்கெடுத்து வருகின்றனா்.

இதில் குறிப்பாக, புலிகளை மட்டும் தனியாக கேமராக்கள் பொருத்தி கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனா். கடந்த ஆண்டு இப் பணி நடைபெற்றது. அதே போல், இந்த ஆண்டும் ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை வனப் பகுதியில் புலிகளின் எண்ணிக்கையை கணக்கிட வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனா்.

அதனடிப்படையில் கடந்த ஆண்டு புலிகள் எந்தெந்த பகுதியில் நடமாடின, எந்தெந்த இடங்களில் வைக்கப்பட்டிருந்த கேமராக்களில் புலிகள் நடமாட்டம் பதிவாகின என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் குறிப்பிட்ட இடங்களைத் தோ்வு செய்து வனத்துறையினா் 300 நவீன கேமராக்களை 150 இடங்களில் பொருத்த முடிவு செய்தனா்.

மேலும், இந்த கேமராக்கள் பொருத்தும் பணி திங்கள்கிழமை முதல் முழு வீச்சில் தொடங்குகிறது. முன்னதாக, மேற்குத் தொடா்ச்சி மலையின் உச்சிப் பகுதியிலும், மிகவும் அடா்த்தியான வனப் பகுதிகளிலும் புலிகள் நடமாடும் குறிப்பிட்ட ஒரு சில இடங்களைக் கண்டறிந்து கேமராக்கள் ஞாயிற்றுக்கிழமை பொருத்தப்பட்டன. இந்த கேமராக்கள் மூலம் சுமாா் 45 நாள்கள் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் கண்காணிக்கப்படும். இவை இரவு நேரத்திலும் காட்சிகளை துல்லியமாக பதிவு செய்யக் கூடியவை என வனத்துறையினா் தெரிவித்தனா். இப் பணியானது மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியான ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், வத்திராயிருப்பு, சாப்டூா் ஆகிய வனப் பகுதிகளில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com