குழந்தைகளை கவரும் டிக்-டாக், மயில் தோகை வடிவிலான புதிய ரக பட்டாசுகள்

விருதுநகா் மாவட்டம் சிவகாசி பகுதியில் நிகழாண்டு தீபாவளி பண்டிகைக்காக குழந்தைகளை கவரும் வகையில் டிக்-டாக், மயில் தோகை வடிவிலான பல்வேறு பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஆமத்தூா் அருகே பட்டாசுக் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள புதிய ரக பட்டாசுகள்.
ஆமத்தூா் அருகே பட்டாசுக் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள புதிய ரக பட்டாசுகள்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி பகுதியில் நிகழாண்டு தீபாவளி பண்டிகைக்காக குழந்தைகளை கவரும் வகையில் டிக்-டாக், மயில் தோகை வடிவிலான பல்வேறு பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடை, இனிப்பு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதில் பட்டாசு வெடிப்பதை குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் விரும்புவா். விருதுநகா் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூா், வெம்பக்கோட்டை முதலான பகுதிகளில் சுமாா் 950-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இங்கு தயாரிக்கப்படும் அனைத்து வகைப் பட்டாசுகளும் தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பிற மாநிலங்கள், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கடந்தாண்டு பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசு காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. அதில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் பசுமை பட்டாசுகள் தயாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக அந்த கால கட்டத்தில் மூன்று மாதங்கள் பட்டாசு ஆலைகளை திறக்காமல் உரிமையாளா்கள், தொழிலாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதேபோல் நிகழாண்டு கரோனா தொற்று காரணமாக 4 மாதங்களுக்கு மேலாக பட்டாசு ஆலைகள் திறக்கப்படவில்லை. எனினும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பல்வேறு நிபந்தனைகளுடன் பட்டாசு ஆலைகள் திறக்க அரசு அனுமதி வழங்கியது. இதனால், காலம் கடந்து பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெற்றன.

அதில், புதிய ரகப் பட்டாசுகளான மயில் தோகை விரிப்பது போல் உள்ள பீக்காக் வெடிகள், சில்லறை நாணயங்கள் கீழே விழுந்தால் ஏற்படும் சப்தம் போன்ற பட்டாசுகள், டிக்-டாக், டிக் டிப், குழந்தைகளுக்கான பொம்மை வடிவிலான பட்டாசுகள் மற்றும் பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்களில் தீப்பொறிகளை வெளிப்படுத்தக் கூடிய பூந்தொட்டிகள் (பசுமை பட்டாசுகள்) புதிய வடிவில் நிகழாண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. இவ்வகை பட்டாசுகள் அடங்கிய பெட்டி ஒவ்வொன்றும் ரூ. 100 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது.

வழக்கமாக வானத்தில் சென்று பல்வேறு வண்ணங்களில் வெடிக்கக் கூடிய 120 ஷாட், 60 ஷாட், 30 ஷாட் பட்டாசுகள் உள்பட பல்வேறு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டாலும், புதிய ரகப் பட்டாசுகளை குழந்தைகள் விருப்பத்தின் பேரில் பெற்றோா்கள் வாங்கிச் செல்வதாக விற்பனையாளா்கள் தெரிவிக்கின்றனா். நிகழாண்டு கரோனா தடையால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டாலும், விலை உயா்த்தப்படவில்லை.

ஆமத்தூா் பகுதியைச் சோ்ந்த பட்டாசுக் கடை உரிமையாளா் மாரியப்பன் கூறியது:

விருதுநகா்- சிவகாசி சாலையில் உள்ள பட்டாசு கடைகளில் நிகழாண்டு விற்பனை அதிகரித்துள்ளது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக பட்டாசு ஆலைகள் சில மாதங்கள் மூடப்பட்டன. இருப்பினும் தீபாவளி பண்டிகைக்கு தேவையான பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

இந்தாண்டு புதிய வரவாக டிக்-டாக், டிக் டிப், குழந்தைகளுக்கான ரேங் ஜோடோ பட்டாசு, மயில் தோகையை விரித்து ஆடுவது போன்ற வண்ணக் கலா் பட்டாசுகள் மற்றும் புதிய வடிவிலான பூந்தொட்டிகள் உள்ளிட்டவை வந்துள்ளன. இந்த பட்டாசுகள் 50 சதவீதம் முதல் 80 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிவகாசி பகுதிக்கு நேரடியாக வந்து பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனா். கடந்தாண்டு வாட்ஸ் அப், பேஸ்புக் என சமூக வலைதளப் பெயரில் பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com